மனைவியை கொல்லுவதற்காக மனித வெடிகுண்டாக மாறிய கணவன், தனது உடலில் வெடிகுண்டை கட்டி கொண்டு வெடிக்க வைத்த சம்பத்தில் போலீசார் உட்பட ஊரே மிரண்டு போய் உள்ளது.

மிசோரம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

நமது ஊர்களில் கணவன் - மனைவி இடையேயான சண்டைகள் நடப்பது வாடிக்கையான ஒன்று தான். அப்படியான சண்டைகள் பெரும்பாலும், நிச்சயக்கப்பட்ட திருமணமாக இருந்தால், கருத்து வேறுபாடு, மது, கள்ளக் காதல் ஆகியவே பிரச்சனைக்கு முக்கிய காரணமாக இருக்கும்.

இதுவே காதல் திருமணமாக இருந்தால், ஆசை 60 நாள், மோகம் 30 நாள் என்ற பழமொழிக்கு ஏற்ப 90 நாளுக்கு மேல் பலரது வாழ்க்கை தரை தட்டி நிற்கும்.

இப்படியான சண்டைகளில் எல்லாம் வெறும் வாய் வார்த்தைகளாகவும், பின்னர் கையால் அடித்துக்கொள்வதும், அதிகபட்சமாகக் கத்தி, அறுவாள் போன்ற ஆயுதங்களால்ஷ மனைவியை தாக்குவதும் கடந்த காலங்களில் நாம் பார்த்து வந்திருக்கிறோம்.

ஆனால், மிசோரத்தில் மனித குண்டை உடலில் கட்டி கொண்ட கணவன், அதனை வெடிக்க வைத்த தனது மனைவியை கொன்றதோடு, அவரும் அதில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
 
மிசோரம் மாநிலம் லுங்லேயில் பக்கதியைச் சேர்ந்த 62 வயதான ரோமிங்லியானா என்ற நபர், 61 வயதான லந்தியாக்ளிமி என்ற பெண்ணை, அவர் 2 வதாக திருமணம் செய்துகொண்டார். அந்த பெண்ணுக்கு அவர் 2 வது கணவன் ஆவார். 

இவர்களது திருமணத்திற்குப் பிறகு, அடுத்த சில மாதங்களில் அந்த மனைவி அவர் பிரிந்து சென்று விட்டார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட கணவன், தன்னை ஏமாற்றிவிட்டுச் சென்ற தனது 2 வது மனைவி மீது கடும் கோபத்தில் இருந்தார்.

அத்துடன், தனது வயதான காலத்தில் தன்னை இப்படி தனியாக தவிக்க விட்டச் சென்ற மனைவியையே பழி வாங்க அவர் துடித்திருக்கிறார். 

இதற்காகவே அவர் தக்க சமயம் பார்த்துக்கொண்டிருந்த நிலையில், கடந்த வாரம் ஜெலட்டின் வெடி மருந்து அடங்கிய வெடி பார்சலை தன்னுடைய உடலில் கட்டி கொண்டு, தன்னை ஏமாற்றிச் சென்ற தனது 2 மனைவியை தேடிச் சென்று அவரிடம் பேச்சு கொடுப்பது போல், அந்த பெண்ணின் அருகில் அமர்ந்து சிகெரட்டை பற்ற வைத்திருக்கிறார். 

அப்போது, அவரின் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டு வெடித்து உள்ளது. இந்த வெடி விபத்தில் அவர்கள் இருவரும் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தனர்.

அங்கு, வெடிகுண்டு வெடித்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துவிட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட இருவரையும் அக்கம் பக்கத்தினர் அங்குள்ள லுங்லே மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அவசர அவசரமாகக் கொண்டு சென்றனர். அங்கு, இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், “அவர்கள் இருவரும் இறந்து விட்டதாக” கூறினர். 

இந்த வெடிக்குண்டு தாக்குதல் சம்பவத்தில் அந்த பெண்ணின் முதல் கணவருக்கு பிறந்த 40 வயது மகள் காயமின்றி உயிர் தப்பினார். பின்னர், இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, “எனது அம்மாவைத் தேடி வந்த அந்த 2 வது கணவர், சிகெரட்டை பற்ற வைத்துக்கொண்டே எனது அம்மாவை கட்டிப்பிடித்து உருண்டுள்ளார். அப்போது அந்த வெடிகுண்டு வெடித்தது” என்றும், அந்த மகள் கூறியிருக்கிறார். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.