KH234 டீசர் எப்போது?- மணிரத்னம் உடன் கைகோர்க்கும் பிரம்மாண்டப் பட அட்டகாசமான அப்டேட் கொடுத்த உலகநாயகன் கமல்ஹாசன்!

KH234 டீசர் ரிலீஸ் அப்டேட் கொடுத்த உலகநாயகன் கமல்ஹாசன்,ulaganayagan kamal haasan shared teaser update of kh234 mani ratnam | Galatta

தற்சமயம் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வரும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தனது திரைப்பயணத்தில் 234 ஆவது திரைப்படமாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் KH234 படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பை பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே அறிவித்திருக்கிறார். இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற ஜாம்பவானாக கிட்டத்தட்ட கடந்த 64 ஆண்டுகளுக்கும் மேலாக தனது திரைப் பயணத்தில் தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் மகத்தான கலைஞன் உலக நாயகன் கமல்ஹாசன். ரசிகர்களின் ரசனையை உயர்த்தும் நோக்கில் தனது கலையை அடுத்தடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கி கொண்டிருக்கும் தளபதி விஜயின் லியோ படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் 500 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது

அடுத்ததாக தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து அடுத்ததாக தனது 233 வது திரைப்படமாக உருவாகும் KH233 திரைப்படத்தில் இயக்குனர் H.வினோத் உடன் கைகோர்க்கிறார் உலகநாயகன். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, மேற்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்த KH233 படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே உலக நாயகன் தொடங்கிய “தலைவன் இருக்கின்றான்” திரைப்படத்தின் தலைப்பை இப்படத்திற்கு வைக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளி வருகின்றன. அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த வரிசையில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் 234 வது திரைப்படமான KH234 திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். இந்திய சினிமாவின் ஆகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக போற்றப்படும் “நாயகன்” திரைப்படத்திற்கு பின் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்திருக்கும் இயக்குனர் மணிரத்னம் - உலகநாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் KH234 திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இத்திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் என பல நட்சத்திரங்களின் பெயர்கள் சமூக வலைதளங்களில் தற்போது உலா வரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் உலக நாயகன் KH234 படத்தின் டீசர் குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டு இருக்கிறார். அது குறித்து பேசிய போது தற்போது இயக்குனர் மணிரத்னம் அவர்கள், “KH234 திரைப்படத்தின் டீசருக்காக பணியாற்றி வருகிறார் வருகிற நவம்பர் 7ஆம் தேதி அந்த டீசர் வெளியாகும்” என கமல்ஹாசன் அவர்கள் தெரிவித்திருக்கிறார். நவம்பர் 7ஆம் தேதி உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் தினத்தன்று இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் KH234 திரைப்படத்தின் டீசர் வெளிவரும் என்ற இந்த அறிவிப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.