கோயம்புத்தூரில் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் என்ற பெருமைக்கு சொந்தமானவர் கோயம்புத்தூர் வடவள்ளியை சேர்ந்த ஷர்மிளா. தனியார் பேருந்து ஓட்டுனரான இவர் சமீபத்தில் இணையத்தில் மக்களின் பாராட்டுகளை பெற்று வீடியோக்களும் புகைப்படங்களும் வைரலானது. மக்களிடம் நல்ல பெயர் பெற்ற பேருந்து ஓட்டுனராக இருந்து வந்த ஷர்மிளாவிற்கு ஆதரவு தெரிவித்து கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் ஷர்மிளா ஓட்டுனராக பணிபுரிந்த தனியார் பேருந்தில் பயணம் செய்தார்.
அவரை தொடர்ந்து சமீபத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் ஷர்மிளா ஓட்டும் பேருந்தில் பயணம் செய்து அவரது ஆதரவை அளித்தனர். இந்த நிகழ்வு நடந்த சில மணி நேரங்களிலேயே ஷர்மிளா பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த நிகழ்வு சில நாட்களாக விவாத பொருளாக மாறியுள்ளது. ஓட்டுநர் வேலையை இழந்த ஷர்மிலாவிற்கு ஆதரவு தெரிவித்து மக்கள் இணைய தளங்களில் தங்களது கருத்துகளை பதிவிட்டனர்.
இந்த நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் அவர்கள் ‘கமல் பண்பாட்டு மையம்’ சார்பில் ஷர்மிளாவிற்கு கார் ஒன்றை தொழில் முனைவு நோக்கத்தில் வழங்கியுள்ளார். தனியார் பேருந்து நிறுவனத்தின் கீழ் வேலை பார்த்து வந்த ஓட்டுனர் ஷர்மிளாவை தொழில் முனைவோரை மாற்ற இதை செய்துள்ளார். இது குறித்து கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி, முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரலட்சுமி போல கோயம்புத்தூரில் முதன்முறையாக தனியார் பேருந்து ஓட்டுநராக இருந்தவர் ஷர்மிளா. பேருந்து ஓட்டுநராக வரவேண்டுமெனும் தன்னுடைய கனவிற்காக உழைத்து, சவாலான பணியை திறம்படச் செய்து வந்தார். அதற்காகப் பல்வேறு தரப்பின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார். தன் வயதையொத்த பெண்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஷர்மிளா குறித்த சமீபத்தைய விவாதம் என் கவனத்திற்கு வந்தது. மிகுந்த வேதனை அடைந்தேன்.ஷர்மிளா ஓர் ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல. பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவரென்பதே என் நம்பிக்கை. கமல் பண்பாட்டு மையம் தனது பங்களிப்பாக ஒரு புதிய காரை ஷர்மிளாவிற்கு வழங்குகிறது. வாடகைக் கார் ஓட்டும் தொழில்முனைவராக தனது பயணத்தை ஷர்மிளா மீண்டும் தொடரவிருக்கிறார். ஆண்டாண்டு காலமாய் அடக்கி வைக்கப்பட்ட பெண்கள் தங்கள் தளைகளை உடைத்து தரணி ஆளவருகையில், ஒரு பண்பட்ட சமூகமாக நாம் அவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மகள் ஷர்மிளாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். ” என்று குறிப்பிட்டுள்ளார்.
பேருந்து ஓட்டும் வேலை இழந்த பெண் ஓட்டுநருக்கு கார் கொடுத்து தொழில்முனைவோர் ஆக்கிய நம்மவர் திரு.@ikamalhaasan#kamalhaasan #Coimbatore #Sharmila pic.twitter.com/gd9Yft3j8I
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) June 26, 2023
இது தொடர்பாக வீடியோ மற்றும் அறிக்கை ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் கமல் ஹாசனின் இச்செயல் மிகப்பெரிய அளவு பேசப்பட்டு பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
பேருந்து ஓட்டுனர் ஷர்மிளாவிற்கு புதிய காரை வழங்கினார் கமல்ஹாசன்!@ikamalhaasan #Sharmila #BusDriver #BusDriverSharmila #Coimbatore #Ulaganayagan #KamalHaasan #Galatta pic.twitter.com/bm0MHKOPh6
— Galatta Media (@galattadotcom) June 26, 2023