கல்கியின் புகழ்பெற்ற படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை சினிமாவாக்கி வருகிறார் இயக்குனர் மணிரத்னம். தமிழ், இந்தி, தெலுங்கு உட்பட சில மொழிகளில் இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகிறது. இரண்டு பாகமாக உருவாகும் இந்தப் படத்தில், விக்ரம், சரத்குமார், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, லால் உட்பட பல நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். ஐஸ்வர்யா ராய் இரண்டு வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, பூங்குழலி கேரக்டரில் நடிக்கிறார். சுந்தரச் சோழனாக சரத்குமாரும் ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராமும் நடிக்கின்றனர். ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி நடிக்கின்றனர். குந்தவை பிராட்டியாக த்ரிஷா, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. 

இதன் ஷூட்டிங் தாய்லாந்தில் பிரம்மாண்ட செட் அமைத்து நடந்து வந்தது. அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்தது. அங்கு ஜெயம் ரவியின் ஓபனிங் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதையடுத்து ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வந்தது. அங்கு ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், சரத்குமார் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அடுத்தக் கட்ட படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது. 

கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட ஷூட்டிங் மீண்டும் தொடங்கியது. இதன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகை ஐஸ்வர்யா ராய், இந்த மாதத் தொடக்கத்தில் ஐதராபாத் வந்திருந்தார். சமீபத்தில் நடிகர் ரஹ்மான் பொன்னியின் செல்வன் படக்குழுவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை த்ரிஷாவும் இதன் ஷூட்டிங்கில் இணைந்துள்ளார். அவர் கையில் பொன்னியின் செல்வன் நாவலை வாசிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன் குதிரையேற்ற பயிற்சி பெற்றார். குதிரையுடன் இருக்கும் புகைப் படத்தையும் அவர் வெளியிட்டிருந்தார் என்பது குறுப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். இந்தாண்டு அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கும் படங்களில் இந்தப் படமும் ஒன்று.