தமிழகத்தின் முன்னணி ரேடியோ ஜாக்கியாக பலகோடி தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்த RJ பாலாஜியின் கிரிக்கெட் வர்ணனைக்கும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் RJ பாலாஜி, LKG திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் கதாசிரியராகவும் களமிறங்கி வெற்றி பெற்றார்.

தொடர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரமும் எடுத்தார். LKG & மூக்குத்தி அம்மன் என அடுத்தடுத்து RJ பாலாஜி & குழுவின்  திரைப்படங்கள் வெற்றி பெற்றதையடுத்து ஹாட்ரிக் ஹிட் கொடுக்க தனது அடுத்த படத்தை தொடங்கினார் RJ பாலாஜி. 

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பதாய் ஹோ படத்தின் தமிழ் ரீமேக்காக தயாராகும் TeamRJB3 (வீட்ல வேசஷங்க) படத்தை இயக்கி நடிக்கிறார் RJ பாலாஜி, NJ.சரவணன் இணை இயக்குனராக பணியாற்றுகிறார். தயாரிப்பாளர் போனி கபூரின் பேவியூ பிராஜக்ட்ஸ், ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் TeamRJB3 (வீட்ல வேசஷங்க) படத்தில் RJ பாலாஜிக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்கிறார். 

மேலும் சத்தியராஜ் மற்றும் ஊர்வசி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, கௌரவ தோற்றத்தில் யோகிபாபு நடித்துள்ளார்.சமீபத்தில் தொடங்கப்பட்ட TeamRJB3 படப்பிடிப்பு கோயம்புத்தூரில் 40 நாட்களாக நடைபெற்ற நிலையில் தற்போது படப்பிடிப்பை RJ பாலாஜி & குழு முழுவதுமாக நிறைவு செய்துள்ளது.

இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள RJ பாலாஜி, கடவுளுக்கும், எனது படக்குழுவுக்கும், அருமையான கோயமுத்தூர் வாழ் மக்களுக்கும் நன்றிகள்...2022-ஆம் ஆண்டின் சிறந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக TeamRJB3 (வீட்ல வேசஷங்க) இருக்கும் என உறுதி அளிக்கிறோம்!!! என தெரிவித்துள்ளார். தொடர்ந்து இத்திரைப்படம் குறித்து அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.