நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பின் H.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிக்கும் வலிமை படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தல அஜித் சினிமா துறையில் நுழைந்து 28 வருடங்கள் ஆகிறது. இதை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து பதிவு செய்து வருகின்றனர். சென்ற மாதம் அதற்காக ஒரு காமன் DP வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

போனி கபூர் தயாரித்து வரும் வலிமை படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வந்தது. அங்கு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து சென்னையில் ஒரு ஸ்டுடியோவில் ஷுட்டிங் நடந்தது. அதன் பின் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு போட பட்டதால் வலிமை படத்தின் ஷுட்டிங் தடைபட்டு இருக்கிறது. 

இயல்பு நிலை திரும்பிய பிறகு தான் ஷுட்டிங் துவங்க முடியும் என்கிற சூழ்நிலை உள்ளது. அதுவரை ஷுட்டிங்கிற்கு அரசு அனுமதி அளிக்குமா என்பது கேள்விக்குறியாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சீரியல்கள் ஷூட்டிங்கிற்கு மட்டும் அரசு அனுமதி அளித்துள்ளது. தல அஜித்தின் வலிமை படத்தை இந்தியிலும் உருவாக்கி பான் இந்தியா படமாக வெளியிட போனி கபூர் திட்டமிட்டுள்ளார். 

கடந்த சில வருடங்களாக ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் ஏரோ மாடலிங் செய்து வந்த அஜித், அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த தக்‌ஷா மாணவர்கள் குழுவுடன் இணைந்து பணியாற்றினார். அந்தக் குழுவின் ஆலோசகராகவும் இருக்கிறார் நடிகர் அஜித். ஆளில்லா விமானங்களை உருவாக்குவதற்கு அவர்களுக்கு உதவி இருக்கிறார். அவர் தலைமையிலான தக்‌ஷா குழு உருவாக்கிய ட்ரோன்கள் இந்திய அளவில் பல்வேறு போட்டிகளில் முதல் இடம் பெற்று சாதனை படைத்தன. 

இப்போது கொரோனா காலத்தில் வான் வழியாக கிருமி நாசினிகளை தெளிப்பதற்கு தக்‌ஷா குழுவினரின் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. இதற்காக கர்நாடக மாநில துணை முதல்வர் அஸ்வத் நாராயண், அஜித் மற்றும் தக்‌ஷா குழுவினரை பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அந்தரத்தில் கோளாறான ஆளில்லாத விமானத்தை அஜித் தரையிறக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அஜித் இயக்கும் ஆளில்லா விமானம் புறப்பட்டு வானில் பறக்கிறது. சிறிது நேரம் ரவுண்ட் அடித்த பிறகு அதை தரையிறக்குகிறார்கள். கீழே இறங்க ரெடியாகும்போது, விமானத்தின் கியர் கோளாறாகி விடுகிறது. இதையடுத்து சாமர்த்தியமாகக் கையாண்டு, அந்த விமானத்தைத் தரையிறக்குகிறார் நடிகர் அஜித். இந்த வீடியோ ரசிகர்களை ஈர்த்து வருகிறது.