கடந்த 1996-ம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வெளியாகி வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகிறது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். 24 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் தாத்தாவான சேனாபதியை மீண்டும் காண ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள். 

விவேக், டெல்லி கணேஷ், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் போன்ற நட்சத்திரங்கள் இதில் உள்ளனர். சில நாட்கள் முன்பு இந்தியன்-2 படப்பிடிப்பின் போது க்ரேன் அழுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் உதவி இயக்குநர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த சோகத்தில் இருந்து மீண்டு வருவதற்குள், கொரோனா எனும் கொடிய வைரஸ் பரவி உலகையே வாட்டி வதைக்கிறது. 

கடந்த பிப்.19 ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் 150 அடி உயரத்தில் லைட் அமைக்கும் பணியில் ஈடுபட்ட போது அதைத் தாங்கி நின்ற கிரேன் எதிர்பாராத விதமாகச் சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் அந்தப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மற்றொருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பலியானார்.

இந்த விபத்து தொடர்பாக லைகா நிறுவனம், கிரேன் உரிமையாளர் மற்றும் புரொடக்ஷன் மேனேஜர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு மொத்தமாக ரூ. 4 கோடி இழப்பீடு வழங்கியுள்ளனர். இதனை கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கினர். இதில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்பட நிர்வாகிகளும் சினிமா பிரபலங்களும் லைகா நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்துகொண்டு நிதியுதவியை வழங்கினர். 

லாக்டவுன் காரணமாக திரைத்துறை சார்ந்த அனைத்து பணிகளும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது சமூக இடைவெளியுடனும், பாதுகாப்புடனும் பல திரைப்படங்களின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இந்தியன் 2 படத்திற்கான எடிட்டிங் பணிகளை இயக்குனர் ஷங்கர் துவங்கிவிட்டதாக செய்திகள் சமீபத்தில் வெளியானது.