இலங்கை காலி முகத் திடலில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவர்கள் வெளியேற காவல்துறை உத்தரவிட்டு உள்ளது.

அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கிறது. அந்த நாட்டில் அன்னியச்செலாவணி கையிருப்பு கரைந்துபோனதால் இறக்குமதி பாதித்துள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலை விஷம் போல ஏறி வருகிறது. எரிப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்துக்கிடக்கின்றனர்.

மேலும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் போராட்டங்கள்  தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார் அதிபர் கோத்பய ராஜபக்சே. இந்நிலையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் படும் இன்னல்களைச் சுட்டிக்காட்டி  அந்நாட்டு அமைச்சர் ரோஷன் ரணசிங்கே பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.  

அன்றாட தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடும் உயர்ந்திருக்கிறது. காகிதம் இல்லாததால் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கூட நடத்த முடியாத அளவிற்கு நிலைமை மோசமாகியிருக்கிறது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் கிடைக்காததால் போக்குவரத்துக்கு ஸ்தம்பித்துள்ளது.

அதனைத்தொடர்ந்து  நிதி நெருக்கடையை சமாளிக்க சீனாவிடம் கடன் வாங்கிய இலங்கை பின்னர் அந்த கடனை கட்ட முடியாமல் சிக்கித்தவித்தது. மேலும், விவசாயத்திற்கு இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதனால் இலங்கையில் உணவு, எரிபொருள் தட்டுப்பாடுடன், தினசரி பல மணி நேர மின்வெட்டும் நீடிக்கிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்துவருவதால் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனைத்தொடர்ந்து  போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் நேற்று இலங்கை அமைச்சரவையில் இருந்து பிரதமர் மகிந்தா ராஜபக்சே தவிர எஞ்சிய அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்தனர். இதனை தொடர்ந்து 4 புதிய அமைச்சர்களை  அதிபர் கோட்டபயா ராஜபக்சே நியமித்தார்.  ஆனால், அதிபர் கோட்டபயா, பிரதமர் மகிந்தா என அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மக்கள், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று  இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக அங்கு வன்முறை வெடித்துள்ளது. தலைநகர் கொழும்புவில் மகிந்த ராஜபக்சேவின் இல்லம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இலங்கையில் ஆளும் கட்சியினர் மீது எதிர்கட்சி மற்றும் பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதில் அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

இதனால் இலங்கையில் வடரெக்க சிறைச்சாலையின் புனர்வாழ்வு முகாமிற்கு கைதிகளை ஏற்றி சென்ற பேருந்து மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 3 சிறைச்சாலை அதிகாரிகள்,  10 கைதிகள் காயமடைந்தனர்.  அத்துடன் பேருந்தில் பயணம் செய்த 58 கைதிகள் தப்பி ஓடியதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதனால் அரசுக்கு எதிராக போராடியவர்களுக்கும் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. ராஜபக்சே ஆதரவாளர்கள் வன்முறையை தூண்டியதில், இலங்கை பற்றி எரிந்தது. அம்பன்தோட்டாவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே ஆகியோரின் குடும்ப வீட்டை போராட்டக்காரர்கள் தீயிட்டுக்கொளுத்தினர்.

அதனைத்தொடர்ந்து இந்த வன்முறைகளில் ஆளுங்கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனாவின் எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரளாவும், அவரது பாதுகாவலரும் பலியாகினர். வன்முறைகளில் மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். நாட்டில் கலவரத்தில் ஈடுபடுவோரையும், பொதுச்சொத்துகளை சேதப்படுத்துவோரையும் சுட்டுத்தள்ள உத்தரவிட்டு முப்படைகளுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. நாடு முழுவதும்  ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது. 

இலங்கையில் மேலும்  அசாதாரண சூழல் நிலவிவரும் நிலையில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இலங்கை ராணுவம் சிறப்பு பாதுகாப்பு அளித்து வருகிறது. இந்த நிலையில் இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக காலி முகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளியேற காவல்துறை உத்தரவிட்டு உள்ளது. மேலும் பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதற்கு எழுத்துப்பூர்வமான உத்தரவை பெற வேண்டும் என்றும் காவல்துறை அறிவித்து உள்ளது.