சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிகைகள் மீனா, குஷ்பூ, நயன்தாரா,கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகர்கள் ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். பரபரப்பாக நடந்து வந்த அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது. அதில் தன் பகுதி காட்சிகளை முடித்து விட்டு சமீபத்தில் சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.
 
இந்நிலையில் தற்போது உடல் பரிசோதனைக்காகவும் ஓய்வு எடுப்பதற்காகவும் அமெரிக்கா புறப்பட்டு உள்ளார். முன்னதாக சிறுநீரகத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 2011 ஆம் ஆண்டு சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று வந்த ரஜினிகாந்த் ,பிறகு மீண்டும் 2016ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். 

இதனையடுத்து அவ்வப்போது உடல் பரிசோதனை மற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்காக அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த் தொடர்ந்து அமெரிக்காவில் சில காலம் இருந்து ஓய்வு எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்தவகையில் மீண்டும் உடல் பரிசோதனைக்காக தற்போது அமெரிக்கா புறப்பட்டு உள்ளார். கொரோனா தொற்று காரணமாக நிறைய கட்டுப்பாடுகள் இருக்கும் சூழலில் தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்வதற்காக மத்திய அரசிடம் அனுமதி கோரினார்.

இந்நிலையில் அனுமதி கிடைத்ததால் தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டார். மேலும் அவருடன் ஒரு நபர் மட்டுமே செல்ல வேண்டிய கட்டுப்பாடுகள் இருப்பதால் லதா ரஜினிகாந்த் உடன் செல்வதாக தெரிகிறது. சில மாதங்களாக அமெரிக்காவில் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் இருந்து வரும் நடிகர் தனுஷ் உடன் ஐஸ்வர்யா தனுஷ் இருப்பதால்  ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றதும்  அவருடன் ஐஸ்வர்யா தனுஷ் இணைய உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமெரிக்கா புறப்படும் சென்னை விமான நிலைய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.