ஆகச் சிறந்த இயக்குனராக தொடர்ந்து தமிழ் திரையுலகிற்கு நல்ல படைப்புகளை வழங்கி வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

வாடிவாசல் திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட் சமீபத்தில் சென்னையிலுள்ள ஈசிஆரில் பிரத்யேக செட் அமைக்கப்பட்டு நடைபெற்ற நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நடிகர் சூரி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

மேலும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ், பவானி ஸ்ரீ மற்றும் சேத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். RS இன்போடெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிப்பில் உருவாகும் விடுதலை திரைப்படத்திற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். 

பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை தழுவி தயாராகி வரும் விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கலை இயக்குனர் ஜாக்சன் சிறுமலையின் மலை பகுதியில் விடுதலை திரைப்படத்திற்காக பிரத்யேகமாக ஒரு கிராமத்தை செட் அமைத்துள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 

மேலும் சிறுமலை பகுதியை சேர்ந்த மக்களையும் குழந்தைகளையும் விடுதலை படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் நடிக்க வைத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் விடுதலை திரைப்படத்தின் புதிய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியானது. அந்த புகைப்படங்கள் இதோ…