அரங்கத்தை ஆர்ப்பரிக்க வைக்கும் குத்து பாடலானாலும் சரி,ரசிகர்களை கட்டிப்போடும் மெலடி பாடலானாலும் சரி இந்த ஜெனெரேஷனின் பல்ஸ் அறிந்து பல சூப்பர்ஹிட் ஆல்பங்களை கொடுத்தவர் அனிருத்.தனது ஒவ்வொரு படத்திலும் சூப்பர்ஹிட் பாடல்களை கொடுத்து இளைஞர்களின் இதயத்துடிப்பாக மாறிய அனிருத்தின் 25ஆவது படமான காத்துவாக்குல ரெண்டு காதல் படம் விரைவில் வெளியாகவுள்ளது,இன்று இவர் இசையமைத்த முதல் படமான 3 படம் வெளியாகி 10 ஆண்டுகளை கொண்டாடி வருகிறது.அவர் கடந்து வந்த பாதை குறித்த ஒரு சிறு பார்வை

2011 யூடியூப் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அதிகம் பேரால் அறியப்படாத காலகட்டம் , தனுஷ் தனது 3 படத்தின் முதல் பாடலை வெளியிட்டார்.Why this கொலவெறி என்ற இந்த பாடல் உலகம் முழுவதும் ரீச் ஆனது.யாருப்பா இந்த பையன் நல்லா பாட்டு போட்ருக்கானேன்னு பலரும் பாராட்ட , அங்கே தொடங்கியது அனிருத்தின் வைரல் பயணம்.இசையமைப்பாளராக முதல் பாடலிலேயே உலகளவில் ரீச் அந்த படத்தின் மற்ற பாடல்களும் ஹிட் அடிக்க , பரவாயில்லையே இந்த வயசுலயே சூப்பரா மியூசிக் போட்றான்ல என பாராட்டுக்கள் ஒரு பக்கம் வந்தாலும் ,  ஏதோ ஒரு பாட்டு ஹிட் ஆகிடுச்சு லக்கால , அடுத்த படத்துல பாப்போம் என்ற விமர்சனங்களும் வந்துகொண்டே இருந்தன.

அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் இரண்டு வளரும் நட்சத்திரங்கள் இணைந்த படம்.தன் மீது வைத்த விமர்சனங்களை அடித்து நொறுக்குவதுபோல அனிருத் இசையில் பாடல்கள் சூப்பர்ஹிட் அடித்தன.இவற்றை தொடர்ந்து வணக்கம் சென்னை,மான் கராத்தே என ஹிட் ஆல்பங்கள் கொடுத்த அனிருத் கோலிவுட்டில் ஹிட் இசையமைப்பாளராக வளர்ந்தார்.இவர் போடும் பாடல்கள் அனைத்தும் இன்ஸ்டன்ட் ஹிட் ஆக இளைஞர்களின் இத்துடிப்பாக மாறினார் அனிருத்.

2014 அனிருத்தின் இசை வாழ்க்கையை வேற லெவெலுக்கு எடுத்து சென்ற வருடம் தனுஷின் வேலையில்லா பட்டதாரி, அனிருத்தின் மாஸ் பரிமாணத்தை உலகிற்கு காட்டியது.இந்த படத்தின் தீம் மியூசிக் ஒலித்தால் இன்றும் ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப்பிளக்கும்.அனிருதுக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது இந்த படம்.அடுத்ததாக விஜயின் கத்தி படத்தில் இணைந்தார் அனிருத் இதுவே அனிருத்தின் முதல் பெரிய ஹீரோ படம் என்பதால் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது.இதனை பூர்த்தி செய்து முன்னணி இசையமைப்பாளர்களில் உருவாக அனிருத் தன்னை நிலைநாட்டினார்.இந்த படத்தின் தீம் மியூசிக் இன்றும் பல விஜய் ரசிகர்களின் ரிங்டோனாக இருப்பதை பார்க்கமுடியும்.

இதனை அடுத்து காக்கி சட்டை,நானும் ரௌடி தான் என தனது ஹிட் லிஸ்டை தொடர்ந்து வந்த அனிருத்துக்கு , அடுத்ததாக ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்தது.அஜித்தின் வேதாளம் படத்திற்கு இசையமைத்தார் அனிருத்.ஆலுமா டோலுமா என இறங்கி அடித்த அனிருத்தின் இசை பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது.இதனை அடுத்து தங்கமகன்,ரெமோ போன்ற படங்களில் தனது ஹிட் பாடல்களை தொடர்ந்த அனிருத்,மீண்டும் அஜித்துடன் விவேகம் படத்தில் இணைந்தார் உலகத்தரத்தில் இசையமைத்த இந்த படத்தின் இசையும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.தொடர்ந்து வேலைக்காரன்,தானா சேர்ந்த கூட்டம்,கோலமாவு கோகிலா என இடைவிடாது தனது சூப்பர்ஹிட் இசையால் ரசிகர்களை ஈர்த்தார் அனிருத்.

2018-ல் தெலுங்கிலும் தனது என்ட்ரியை கொடுத்தார் அனிருத் , படம் பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் அனிருத் இசை நல்ல வரவேற்பை பெற்றது.அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார் அனிருத்.தனது ட்ரெண்டிங் இசையால் மரணமாஸ் காட்டிய அனிருத்,ரசிகர்களுக்கு செம விருந்தளித்தார்.மீண்டும் தெலுங்கிற்கு சென்ற அனிருத் ஜெர்சி,கேங் லீடர் என அங்கும் தனது இசையால் ரசிகர்களை ஈர்த்தார்.அடுத்ததாக தர்பார் படத்தில் மீண்டும் சூப்பர்ஸ்டாருடன் இணைந்த அனிருத்தின் பாடல்கள் செம ஹிட் அடித்தன.

2021 மீண்டும் அனிருத்திற்கு ஒரு பெரிய வருடமாக அமைந்தது தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து 10 வருடங்கள் ஆனதை கொண்டாடி வந்த அனிருதிற்கு ஆரம்பமே அமர்க்களம் தான்.விஜய் நடித்த மாஸ்டர் படம் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் செம ஹிட் அடித்தது.இந்த படத்தின் அனிருத்தின் இசை பெரிதும் பாராட்டப்பட்டது.அடுத்ததாக இரண்டாம் பாதியில் வெளியான சிவாகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் இசையில் இவர் பின்னி பெடலெடுக்க , அனிருத் தான் மற்றுமொரு நாயகன் என பலரும் பாராட்டி வந்தனர்.பட ரிலீஸ்கள் மட்டுமின்றி ஜலபுல ஜங்கு,டூ டூ டூ என ஜாலியாக அசத்தினாலும் சரி,ரெண்டு காதல் என எமோஷனலாக தாக்கினாலும் அனிருத்தின் இசை நம்மை வெகுவாக ஈர்க்கிறது.

2022-ஐ ரொமான்டிக் ஆக நான் பிழை மற்றும் Bae பாடல்களுடன் தொடங்கினார் அனிருத்.2022 அனிருத்துக்கு அடுத்த மாஸ் Blockbuster வருடமாக அமைவதற்கான அடித்தளம் காதலர் தினத்தன்று வந்தது.தளபதி விஜய்-நெல்சன் கூட்டணியில் உருவாகும் பீஸ்ட் படத்தில் இவர் இசையமைத்த முதல் பாடலான அரபிக் குத்து பாடல் வெளியாகி ஒரே நாளில் 25 மில்லியன் 12 நாளில் 100 மில்லியன் என்று இன்டர்நெட்டை மிரள வைத்து வருகிறது.இந்த பாடலின் ட்ரெண்டிங் ஓய்வதற்குள் பீஸ்ட் படத்தில் விஜய் பாடிய ஜாலியோ ஜிம்கானா பாடல் ஹிட் அடித்து வருகிறது.

அடுத்து தங்கள் மனம்கவர்ந்த நாயகனுக்கு அனிருத் எப்போது மியூசிக் போட போகிறார் என பல ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.அந்த வரிசையில் அனிருத் இசையமைத்துள்ள பீஸ்ட்,விக்ரம்,காத்துவாக்குல ரெண்டு காதல்,டான்,திருச்சிற்றம்பலம் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளிக்க காத்திருக்கிறது.

பல முன்னணி நட்சத்திரங்கள் படங்களில் பிஸியாக வேலை பார்த்து வரும் அனிருத் இன்னும் பிஸியாகும் படி இந்த வருடம் இரண்டு படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன அதில் ஒன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள தலைவர் 169,அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள AK 62 படத்திற்கும் இசையமைக்கவுள்ளார்.இதுமட்டுமின்றி அட்லீ-ஷாருக்கன் படம்,ஜெர்சி ஹிந்தியில் பின்னணி இசை,ஜூனியர் NTR படம் என பல முன்னணி நட்சத்திரங்கள் படங்களில் அனிருத் கமிட் ஆகியுள்ளார் என்ற தகவல்கள் கிடைத்து வருகின்றன.

பல படங்களுக்கு அனிருத் தனது இசையால் உயிர் கொடுத்துள்ளார் என்பதை நாம் மறுக்க முடியாது.எவ்வளவு பிஸியாக இருந்தாலும் இவற்றை தவிர நண்பர்களுக்காக சில படங்களில் ஒரு பாடல் இசையமைத்து தருவது,பாடல்கள் பாடி தருவது போன்ற விஷயங்களை அனிருத் தவிர்ப்பதில்லை.குறுகிய காலத்தில் இவர் இந்த இடத்தை எட்டியிருந்தாலும் அதற்காக இவர் போட்ட உழைப்பு மிகப்பெரியது.இவரது 25ஆவது படமான காத்துவாக்குல ரெண்டு காதல் படம் விரைவில் வெளியாகவுள்ளது என ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

ரஜினி,விஜய்,அஜித் என முன்னணி நடிகர்களுடன் ஒரு படம் மியூசிக் செய்வதே பெரிய பாக்கியமாக இருக்கும் பட்சத்தில் இந்த மூன்று பேருடனும் மூன்று படங்கள் இணைந்து பணியாற்றிய இசையமைப்பாளர் என்னும் பெருமையை அனிருத் பெற்றுள்ளார்.தொட்டதெல்லாம் ஹிட் ஆக மாற்றும் இந்த ஹிட் நாயகன் தொடர்ந்து தனது இசையால் நம் நெஞ்சங்களை கொள்ளை அடிப்பார் என்பது உறுதி.காத்துவாக்குல மியூசிக் போட்டாலும்,பீஸ்ட் மோடில் மியூசிக் போட்டாலும் ராக்ஸ்டாரின் இந்த வெற்றி பயணம் தொடர கலாட்டா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.