போக்குவரத்துத்துறை அமைச்சராக ராஜகண்ணப்பன் பதவி ஏற்ற நாள் முதலாகவே அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் மீண்டும் ராஜகண்ணப்பன் மீது கட்சி ரீதியாகவும் துறை ரீதியாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.

தீபாவளி பண்டிகைக்கு போக்குவரத்துத் துறை பணியாளர்களுக்கு வழங்க வெளியிலிருந்து இனிப்புகளை வாங்குவதாக ராஜகண்ணப்பன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கட்சி தலைமைக்கும் அவர் மீது அதிருப்தி இருந்து வந்தது. போக்குவரத்து துறையின் நியமன விவகாரங்களில் தன் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்த முதல்வர் ஸ்டாலின் அப்போது உடனடி நடவடிக்கை எடுத்து ராஜகண்ணப்பனுக்கு குட்டு வைத்தார். ஆனால் தொடர்ந்து சலசலப்புகளை ஏற்படுத்தி வந்தார் ராஜகண்ணப்பன்.

இந்நிலையில் திமுகவின் தொமுச தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டதும், சென்னையில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 35 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்ததும் ராஜகண்ணப்பனுக்கு எதிராக அமைந்த நிலையில்தான், அரசு அதிகாரியை சாதியைச் சொல்லி சுற்றி பெரும் சர்ச்சையில் சிக்கினார்.  

மேலும் முதுகுளத்தூர்  பிடிஓ ராஜேந்திரனை அமைச்சர் ராஜகண்ணப்பன் சாதிப் பெயரைச் சொல்லி என்னை இழிவாக பேசியுள்ளார்.  அந்த சம்பவம் தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது என்று கண்ணீர் மல்க தெரிவித்தார் ராஜேந்திரன்.  அமைச்சர் ராஜகண்ணப்பன் தனது உதவியாளர் மூலமாக என்னை சிவகங்கையில் உள்ள அவரது இல்லத்திற்கு வருமாறு அழைத்தார்.   இதை அடுத்து நானும் அவரது இல்லத்திற்கு  சென்றேன். என்னை பார்த்த அமைச்சர் ராஜகண்ணப்பன், நீதான் எஸ்.சி. பிடிஓ’வா? உன்னை என்ன பண்றேன்னு  என்று பார்க்கிறாயா என்று தகாத வார்த்தைகளால் பேசினார். இதனால் நான் கண் கலங்கிய படி நின்றேன். சாதிப் பெயரைச் சொல்லி இழிவாக தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார் என்று அடுக்கடுக்கான புகார்களை சொன்ன பிடிஓ ராஜேந்திரன் அமைச்சரின் இந்த இழிவான செயலுக்கு முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் விட்டார். இதையடுத்து முதலமைச்சர் அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருந்த நிலையில் சாதிய குற்றச்சாட்டில் சிக்கியது இதற்கு மேலும் பொறுத்திருக்கக்கூடாது என்றுதான் முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக நடவடிக்கை எடுத்து அவரை இலாகா மாற்றம் செய்திருக்கிறார். ராஜகண்ணப்பன் இலாகா மாற்றம் செய்ததை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இலாகா மாற்றம் செய்துவிட்டால் புனிதர் ஆகிவிடுவாரா ராஜகண்ணப்பன் என்று கேட்டிருந்தார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். மேலும், சாதிய வன்மத்தோடு நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கும் ஒருவரை, சமூக நீதியைக் காப்பாற்ற வேண்டிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு அமைச்சராக்குவதுதான் ஸ்டாலின் கண்டுபிடித்துள்ள திராவிட மாடல் போலும்?!  என்றும், ஒட்டுமொத்த இந்தியாவிலும் சமூக நீதியைக் காப்பற்றப் போவதாக புறப்பட்டிருக்கும் புதிய புரட்சி வீரர்களின் லட்சணம் இதுதானா?  என்று கேட்டிருந்தார்.

மேலும்  ராஜகண்ணப்பன் விவகாரத்தில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.  அவர், சாதி வெறி இந்தியர்களின் இயல்பு மனநிலை! தமிழர்களுக்கு? தெலுங்கர்களுக்கு? அட எந்த மொழி பேசுபவர்களுக்கும் பிறப்பின் வழி கிடைத்த மூலதனம்! சாதியை அறிந்தவர், எதிர்ப்பதின் மூலமாக சமூக நீதி அமைக்க முயற்சிக்கிறார்! அறியாதவன் ராஜ கண்ணப்பன் ஆகிறார் என்று குறிப்பிட்டிருக்கிறார் பா.ரஞ்சித் .

பா.ரஞ்சித் தொடர்ந்து இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தன்னை சாதிரீதியாக இழித்துரைத்து, பலமுறை அவமதித்ததாக தமிழகப் போக்குவரத்துத்துறை அமைச்சர் இராஜகண்ணப்பன் மீது முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன் புகாரளித்திருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சாதி, மதம் என எதன்பொருட்டும், எவர் மீதும் எவ்விதப்பாகுபாடும் காட்டமாட்டேனெனப் பதவியேற்பு உறுதிமொழி எடுத்த அமைச்சரே, சாதியக்கண்ணோட்டத்தோடு அதிகாரியை அவமரியாதை செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

திமுகவினரே தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்’ என அறிஞர் அண்ணா மீது சத்தியமிட்டு முழங்கிய தமிழகத்தின் முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள் சாதிய மனநிலையோடு அவமதித்ததற்கு அமைச்சர் இராஜகண்ணப்பன் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்காது, துறைரீதியாக இடமாற்றம் செய்ததோடு நிறுத்திக்கொண்டது ஏமாற்றமளிக்கிறது.

அமைச்சர் இராஜகண்ணப்பன் போக்குவரத்துத்துறையிலிருந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்குத் துறைமாற்றம் செய்யப்படுவது என்பது எதிர்ப்பின் வீரியத்தைக் குறைத்து மடைமாற்றம் செய்யும் யுக்திதானே ஒழிய, தவறுக்கான உகந்த நடவடிக்கையல்ல. ஆகவே, அமைச்சர் இராஜகண்ணப்பன் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து வழக்குப் பதிவு செய்ய வேண்டுமெனவும், அவரை அமைச்சரவையிலிருந்து நீக்கம் செய்ய முன்வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.