தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக முன்னேறியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபரில் வெளிவந்த டாக்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற மெகாஹிட் பிளாக்பஸ்டர் ஆனது. அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படம் வருகிற மார்ச் 25 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

முன்னதாக இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள சயின்ஸ் ஃபிக்சன் காமெடி திரைப்படமான அயலான் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முதல்முறையாக சிவகார்த்திகேயனின் அயலான் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் இயக்குனர் கே.வி.அனுதீப் இயக்கத்தில் உருவாகும் #SK20 திரைப்படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் #SK21 திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.

நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகும் தனது சிவகார்த்திகேயன் புரடக்ஷன்ஸ் சார்பாக நல்ல திரைப்படங்களை தயாரித்து வரும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் முதல் படமாக வெளிவந்தது கனா திரைப்படம். நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முக தன்மை கொண்ட இயக்குனர் அருண் ராஜா காமராஜின் இயக்கத்தில் முதல் படமாக தயாரான கனா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்திருந்தார்.

மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவான இத்திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழில் சூப்பர் ஹிட்டான கனா திரைப்படம் தெலுங்கில் கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி என தயாரிக்கப்பட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கனா திரைப்படம் தற்போது சீனாவில் சீன மொழியில் ரிலீசாக உள்ளது. Yi Shi பிலிம்ஸ் வெளியிட வருகிற மார்ச் 18ஆம் தேதி திரைப்படம் சைனாவில் கனா ரிலீசாகவுள்ளதாக சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.