ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் இடையே அஜித்குமாரின் வலிமை படம் நேற்று (பிப்ரவரி 24ம் தேதி) உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, மேற்கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள வலிமை திரைப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார்.

அஜித்குமார் உடன் ஹூமா குரேஷி, சுமித்ரா, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்துள்ள வலிமை திரைப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். அதிரடி ஸ்டண்ட் காட்சிகள் நிறைந்த ஆக்சன் த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் வலிமை படத்திற்கு திலிப் சுப்புராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் வெளியாகியுள்ள வலிமை படம் ரிலீசான அனைத்து இடங்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ரசிகர்களால் நிரம்பி வழிகிறது. முன்னதாக நேற்று (பிப்ரவரி 24ம் தேதி) கோவையில் அதிகாலை முதல் காட்சியின் சமயத்தில் மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திருச்சியில் நடைபெற்ற மற்றொரு சம்பவம் இன்னும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

திருச்சியின் லால்குடியில் உள்ள அன்பு திரையரங்கில் நேற்று (பிப்ரவரி 24ம் தேதி) அதிகாலை ரசிகர்கள் காட்சி சமயத்தில் திரையரங்கின் உள்ளே திரைக்கு முன் ரசிகர்கள் பட்டாசு வெடிக்க முயன்றனர். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் அவர்களை தடுக்க முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதில் அஜித் ரசிகர்கள் காவலரின் காக்கி உடையை கிழித்ததோடு அவரது தோள்ப்பட்டையில் கடித்துள்ளனர்.

காவலரை கடித்த அந்த இரண்டு அஜித் ரசிகர்களையும் திருச்சி போலீசார் கைது செய்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப்பிறகு அஜித்குமாரின் வலிமை திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாகி உள்ள நிலையில் திரையரங்குகளில் இது மாதிரியான அசம்பாவித நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.