ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் நாளில் சிலம்பரசன் நடித்து திரைக்கு வந்த படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கியிருந்த இந்த படத்தில் நிதி அகர்வால், பால சரவணன், பாரதிராஜா ஆகியோர் நடித்திருந்தனர். தமன் இசையமைத்திருந்தார். குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக இந்த படம் அமைந்தது. இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து தொடர்ச்சியாக சிம்பு படம் பற்றிய அப்டேட்டுகள் வருவதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் சிம்பு ரசிகர்கள். 

சமீபத்தில் மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அரசியல் மாநாடு நடைபெறும் கூட்டத்தில் கையில் துப்பாக்கியோடு செல்கிறார் சிலம்பரசன். அதன் பின் கட்சி கூட்டத்தில் குண்டு வெடிப்பது போன்ற காட்சி மோஷன் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. மோஷன் போஸ்டரில் இடம்பெற்ற யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை ரசிகர்களின் இதயத்தை அதிர வைக்கிறது. 

மாநாடு படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. இந்நிலையில் மாநாடு படத்தின் படப்பிடிப்பு குறித்து பதிவு செய்துள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. புதிய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதில் சிம்பு நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம். புயல், மழை பாராமல் ஷூட்டிங் பணிகளில் சிலம்பரசன் ஆர்வம் காட்டியது ரசிகர்களை சிலிர்க்க வைத்தது. 

கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்க SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். 

மாநாடு படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு பத்து தல படப்பிடிப்பில் சிம்பு இணைவார் என்று கூறப்படுகிறது. ஓபிலி என்.கிருஷ்ணா இயக்கவுள்ள இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, டீஜே அருணாச்சலம், மனுஷ்ய புத்திரன், கலையரசன் ஆகியோர் நடிக்கின்றனர். பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. நாற்காலியில் சிலம்பரசன் அமர்ந்திருப்பது போன்று உள்ளது இந்த போஸ்டர். இந்த படத்திற்கு இசைப்புயல் AR ரஹ்மான் இசையமைக்கிறார்.