தமிழ் திரையுலகில் பல வெற்றி படங்களை தந்து ரசிகர்களின் ஃபேவரைட் இயக்குனராக திகழ்பவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் அசுரன் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை கொண்டு இந்த படம் உருவானது. தனுஷின் மாறுபட்ட நடிப்பு திரை விரும்பிகளை ஈர்த்தது. மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டீஜே ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். தாணு தயாரித்த இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்தார். 

சென்ற லாக்டவுனில் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக செய்திகள் வெளியானது. RS இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கவிருக்கும் புதிய படம் அது. இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நடிகர் சூரி வைத்து வெற்றிமாறன் உருவாக்கவிருக்கும் திரைப்படம் ஊரடங்கு காரணாமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு இருப்பதால், இப்போது உள்ள சூழ்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் திரைப்படம் வாடிவாசல். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். முதல்முறையாக சூர்யா - வெற்றிமாறன் கூட்டணி இணைந்திருப்பதாலும், ஜல்லிக்கட்டு தொடர்புடைய கதை என்பதாலும் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அசத்தியது. 

இந்நிலையில் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸும் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும்  இணைந்து ஒரு படத்தைத் தயாரிக்கின்றனர். இப்படம் மூலம் ஃபைவ் ஸ்டார் எஸ்.கதிரேசன் - வெற்றிமாறன் இருவரும் சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளார்கள். இப்படத்திற்கு  வெற்றிமாறன் கதை ,திரைக்கதை  எழுதுகிறார். கதாநாயகனாக சசிகுமார் நடிக்கிறார்.

படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர், நடிகைகள் விவரம் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சினிமாவில் எதிர்பார்ப்புக்குரிய நல்ல திரைப்படங்களை கொடுத்துவரும் மூவரும் இணைந்த இக்கூட்டணியால் இந்த பிரமாண்டமான படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.இதன் படப்பிடிப்பு  2021-ல் பொங்கலுக்குப் பின் தொடங்க உள்ளதாம்.