சூர்யா நடித்த வாரணம் ஆயிரம், கார்த்தி நடித்த பையா, நான் மகான் அல்ல உள்ளிட்ட பல படங்களுக்கு விநியோகஸ்தராக இருந்துள்ளார் தயாநிதி அழகிரி. சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ் உள்ளிட்டவைக்கு போட்டியாக கிளவுட் நயன் மூவிஸ் தொடங்கிய இவர் தயாரிப்பில் வெளியான முதல் படம் அகில உலக சூப்பர்ஸ்டார் சிவாவின் தமிழ்ப்படம் தான்.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தல அஜித்தின் 50-வது படமான மங்காத்தா படத்தை தயாரித்தார். ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், திரிஷா, ஆண்ட்ரியா, ராய் லக்‌ஷ்மி, பிரேம்ஜி, வைபவ், மகத் என மல்டி ஸ்டாரர்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். தல அஜித் ரசிகர்கள் மறக்க முடியாத ஒரு தரமான படத்தை தயாரித்த பெருமை தயாநிதி அழகிரியை சேரும். தூங்கா நகரம், உதயம் என்.எச்4, தகராறு, வடகறி உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.

தற்போது மாஸ்க் எனும் குறும்படத்தை இயக்கியுள்ளார் தயாநிதி அழகிரி. அதன் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையத்தை அசத்தியது. யுவன் ஷங்கர் ராஜாவும் அனிருத்தும் அதை வெளியிட்டனர். கொரோனா சூழலில் மாஸ்க் எப்படி மக்களின் அத்யாவசிய தேவைகளில் ஒன்றாகியுள்ளதோ அதேபோல்தான், மாஸ்க் குறும்படமும் இன்றைய காலகட்டத்திற்கு தேவையான குறும்படம்.

அமீர் நடித்துள்ள இந்த குறும்படத்தில் மஹத் முக்கிய ரோலில் நடித்துள்ளார். மீகா என்டர்டெயின்மென்ட் இந்த குறும்படத்தை தயாரித்துள்ளது. தர்மராஜ் ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு ரமேஷ் தமிழ் மணி இசை பணிகள் மேற்கொள்கிறார். இந்நிலையில் படத்தின் டீஸர் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. டீஸர் காட்சியை பார்க்கையில் ஃபேக் அக்கௌன்ட்டை பயன் படுத்தி தேவையற்ற விஷயங்களை பதிவிடும் நபர் பற்றிய கதையாக இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது. இதில் அமீர் மற்றும் மஹத்தின் ரோல் என்னவென்பது சற்று சர்ப்ரைஸாக இருக்கும். 

இன்றைய கோவிட்-19 முடக்க காலகட்டத்தில் சமூக ஊடகங்கள் தனிப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து தொடர்பு கொள்ள பேருதவியாக இருந்தன.பலவகையிலும்  விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு  உதவியதை அறிவோம்.ஆனால் அதே நேரத்தில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கவும் வதந்திகளைப் பரப்பவும் இந்த ஊடகத்தைப்  பயன் படுத்தியவர்களும் உண்டு. அப்படி ஒருவனைப் பற்றிய கதை தான் மாஸ்க் என்று ஏற்கனவே கூறியிருந்தார் படத்தின் இயக்குனர் தயாநிதி அழகிரி.