இந்திய சினிமாவின் மிகப்பெரிய ஆளுமையாக 43 ஆண்டுகளுக்கும் மேலாக பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாக இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கடைசியாக இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் கடந்த தீபாவளி தினத்தன்று வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது.

முன்னதாக 67 ஆவது இந்திய தேசிய திரைப்பட விருது விழாவில் இந்திய திரை உலகின் உயரிய விருதுகளில் ஒன்றான தாதாசாஹேப் பால்கே விருது சூப்பர்ஸ்டாருக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து டெல்லியில் பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

பின்னர் சென்னை திரும்பிய ரஜினிகாந்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூப்பர்ஸ்டாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைகள் முடிந்து உடல்நலத்தில் நல்ல முன்னேற்றத்துடன் வீடு திரும்பினார்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை, சசிகலா இன்று நேரில் சந்தித்தார். போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் அவர்களின் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்த சசிகலா, சூப்பர்ஸ்டாரின் உடல் நலம் குறித்து விசாரித்ததோடு தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்துள்ளார்.