தமிழ் திரையுலகின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பேராண்மை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சாய் தன்ஷிகா. தொடர்ந்து அருண் விஜய்யின் மாஞ்சா வேலு, வசந்தபாலனின் அரவான் மற்றும் இயக்குனர் பாலாவின் பரதேசி உள்ளிட்ட திரைப்படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

குறிப்பாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த கபாலி திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மகளாக யோகி எனும் கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் நடிகை சாய் தன்ஷிகா. இதனையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வருகிற செப்டம்பர் 9-ம் தேதி வெளிவரவிருக்கும் லாபம் திரைப்படத்திலும் சாய் தன்ஷிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை சாய் தன்ஷிகா சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

இதனை அடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனாவிலிருந்து மீண்டு விட்டேன்... எனது வாழ்க்கையை உணர்வதற்கான சிறந்த தருணமாக இது அமைந்தது…” என தெரிவித்துள்ளார்.