தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் சுல்தான். இதனையடுத்து விஷாலின் இரும்புத்திரை மற்றும் சிவகார்த்திகேயனின் ஹீரோ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் தமிழ் ரசிகர்களின் கனவு திரைப்படமாக தயாராகிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வல்லவராயன் வந்தியத்தேவன் என்னும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் கார்த்தியின் அடுத்த புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.

சர்தார், பொன்னியின் செல்வன் உட்பட இதுவரை 23 திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கும் நடிகர் கார்த்தி,  காற்று வெளியிடை படத்திற்குப் பிறகு பொன்னியின் செல்வனில் மீண்டும் மணிரத்னத்துடன் இணைந்தார். மணிரத்னம் தவிர வேறு எந்த இயக்குனர் உடனும் கார்த்தி இரண்டாவது முறை இணைந்து பணியாற்றியதே இல்லை. இந்நிலையில் தனது அடுத்த படத்தில் மணி ரத்தினத்திற்கு பிறகு மற்றொரு இயக்குனருடன் இரண்டாவது முறையாக இணைகிறார் கார்த்தி.

கடந்த 2015ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான கொம்பன் படத்தை இயக்கிய இயக்குனர் முத்தையா உடன் தற்போது இரண்டாவது முறையாக இணைந்துள்ளார் கார்த்தி. இத்திரைப்படத்திற்கு விருமன் என பெயரிடப்பட்டுள்ளது.மேலும் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சூரி ஆகியோர் நடிக்க, இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் விருமன் திரைப்படத்தின் முலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

விருமன் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் விருமன்  திரைப்படம் தயாராகவுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்போடு விருமன் படத்தின் டைட்டில் போஸ்டரையும்  நடிகர் சூர்யா இன்று வெளியிட்டார். அதிரடியான விருமன் டைட்டில் போஸ்டரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.