தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்து நிற்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். தனது முதல் திரைப்படமான பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் இயக்குனர் மாரி செல்வராஜ் தன் பக்கம் ஈர்த்தார்.

இதனை அடுத்து இயக்குனர் மாரி செல்வராஜ் தனது இரண்டாவது திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்தார். நடிகர் தனுஷுடன் அசுரன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் படத்தையும் தயாரித்தார்.

ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் நடிகர் தனுஷ் கர்ணன் கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் நடிகை ராஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்க, நடிகர் யோகிபாபு, நடிகை லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி மற்றும் பிரபல மலையாள நடிகர் லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக கொண்டாடப்பட்ட கர்ணன் திரைப்படத்தில் கதாபாத்திரங்களாக நடித்த நடிகர்கள் மட்டுமல்லாமல் பறவைகள் , விலங்குகள், சிறு பூச்சிகள், மரம், மலை, சிலை என அனைத்தும் கூட வசனங்கள் இல்லாமல் மக்கள் மனதோடு ஏதோ பேசியது.

அந்தவகையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற குதிரை அனைவரது கவனத்தையும் பெற்றது. இந்த குதிரையின் மீது இறுதிகட்ட காட்சியில் தனுஷ் வரும்பொழுது திரையரங்குகள் அதிர்ந்தன. அலெக்ஸ் என பெயரிடப்பட்ட அந்தக் குதிரை திடீரென உயிரிழந்தது. இதுகுறித்து மிகவும் வருத்தம் அடைந்த இயக்குனர் மாரி செல்வராஜ் அந்த குதிரையோடு இருக்கும் புகைப்படத்தை அலெக்ஸ் என குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.