தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான நடிகர் கார்த்தி அடுத்ததாக இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவன் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் தயாராகி வரும் சர்தார் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இதனிடையே கார்த்தியின் அடுத்த திரைப்படத்தின் புதிய அறிவிப்பு நேற்று வெளியானது. நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். இத்திரைப்படத்தை கொம்பன் படத்தை இயக்கிய இயக்குனர் முத்தையா இயக்குகிறார்.

முன்னணி இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் விருமன் திரைப்படத்திற்கு எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் முன்னோட்டமாக விருமன் திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் நேற்று வெளியானது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் கதாநாயகி குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ஷங்கர் அவர்களின் மகளான அதிதி ஷங்கர், கார்த்தி நடிக்கும் விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். நடிகை அதிதி ஷங்கரை அறிமுகப்படுத்தும் புதிய போஸ்டரையும் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டர் இதோ…