தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் அடுத்ததாக இயக்குனர் மணிரத்தினத்தின் தயாரிப்பில் நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் நவரசா ஆன்தாலஜி வெப்சீரிஸில் கிட்டார் கம்பி மேலே நின்று என்னும் எபிசோடை இயக்கியுள்ளார். இந்த எபிசோடில் நடிகர் சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 6ஆம் தேதி நவரச நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.

இதையடுத்து நடிகர் சிலம்பரசன் உடன் மீண்டும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து இருக்கிறார். இந்த புதிய படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். விண்ணைத்தாண்டி வருவாயா & அச்சம் என்பது மடமையடா திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் மூன்றாவது முறையாக ARR - GVM - STR கூட்டணி இணைந்திருக்கும் திரைப்படம் நதிகளிலே நீராடும் சூரியன்.

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி.கே.கணேஷ் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க பாடலாசிரியர் தாமரை பாடல்களை எழுதியுள்ளார். இந்நிலையில் நதிகளிலே நீராடும் சூரியன் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னதாக தயாரிப்பாளர் திரு.ஐசரி.கே.கணேஷ் அவர்கள் நதிகளிலே நீராடும் சூரியன் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாக அறிவித்திருந்த நிலையில். இன்று சென்னையில் இப்படத்திற்கான முதல் போட்டோ ஷூட் நடைபெற்றுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நடிகர் சிலம்பரசன் நடித்த மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அந்தப் பதிவில், அன்பான சிலம்பரசன் ரசிகர்களே மாநாடு முதல்நாள் முதல் காட்சியில் சந்திப்போம். அடுத்த படம் ஸ்டார்ட் ஆகிடுச்சு... இனிமேல் ஐசரி.கே.கணேஷ் அண்ணன் அப்டேட்டுகள் கொடுப்பார் அண்ணனை பின்தொடருங்கள். வாழ்த்துக்கள் அண்ணா ஐசரி.கே.கணேஷ்... தம்பி சிலம்பரசன்... என குறிப்பிட்டிருக்கிறார். எனவே தொடர்ந்து நதிகளிலே நீராடும் சூரியன் படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.