இலங்கையில் நடைபெற்ற இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 வது ஒருநாள் போட்டியில், தீபக் சாகரின் அசர வைத்த அதிரடி ஆட்டத்தால், 69 இந்திய அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரையும் 2-0 என்று கணக்கில் கைப்பற்றி உள்ளது.

இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. 

இதில், முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற நிலையில், 2 வது போட்டியானது கொழும்புவில் நேற்று மாலை நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில், 9 விக்கெட்டுகள் இழந்து 275 ரன்கள் குவித்தது. தொடக்கத்தில், நிதானமாக விளையாடிய இலங்கை அணி, அதன் பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிக்கொடுத்தது, சராசரியான ரன்களை சேர்த்தது.

இதில், இந்திய தரப்பில் புவனேஷ்வர் குமார், யுஷ்வேந்திர சஹல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். தீபக் சாகர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து, 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து தடுமாறிப்போனது. 

அதன் படி, தொடக்க வீரர்களாகக் களம் இறங்கி நிதானமாக ஆட முயன்ற பிரித்வி ஷா 13 ரன்களிலும், ஷிகர் தவான் 29 ரன்களிலும் அவுட்டாகி தடுமாறிப்போனார்கள்.

பின்னர் வந்த இஷான் கிஷன் ஒரு ரன்னிலும், மணீஷ் பாண்டே 37 ரன்களிலும் அவுட்டானார்கள். ஆனால், ஹர்திக் பாண்டியாக ரன் ஏதும் எடுக்காமல் அதிர்ச்சி அளித்தார். 

பின்னர், இளம் புயல் சூர்யகுமார் யாதவ் நேர்த்தியாகவும், நிதானமாகவும் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அவருடன் ஜோடி சேர்ந்த குருணால் பாண்டியாவும் சற்று நிதானமாக விளையாடிய நிலையில், சோர்ந்துபோன ஆட்டம் மீண்டும் சூடுப்பிடிக்கத் தொடங்கியது.

ஆட்டம் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த நிலையில், சூரியகுமார் யாதவ் மிகப்பிரமாதமாக ஆடி ரன் ரேட்டை தொய்ய விடாமல், 43 பந்துகளில் 53 ரன்களை எடுத்து எல்.பி. ஆனார்.

அதே நேரத்தில், நேர்த்தியாக விளையாடி வந்த குருணால் பாண்டியா 35 சேர்த்திருந்தபோது,  ஆட்டத்தை இறுதிவரை கொண்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பெவிலியன் திரும்பினார். அத்துடன், இந்திய அணியின் வெற்றிக்கு 116 ரன்கள் தேவைப்பட்டது.

இந்தியாவை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் முழுவதுமாக கை விட்டனர். இந்தியாவின் கடைசிக்கட்ட பேட்ஸ்மேன்கள் குறித்து கிரிக்கெட் உலகத்திற்கே தெரியும் என்பதால், போட்டி எப்போது முடியும் என்று எல்லோரும் எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு காரணம், இந்திய அணி தோல்வியே தழுவும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், 8 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தீபக் சாகர், ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். கிரிக்கெட் ரசிகர்கள் அத்தனை பேரின் எதிர்பார்ப்பையும் தவிடிப்பொடியாக்கினார் தீபக் சாகர் - புவனேஷ்வர் ஜோடி. 

இவர்கள் இருவரது விக்கெட்டையும் கடைசி வரை வீழ்த்த முடியாமல், இலங்கை அணி இறுதி நேரத்தில் சொதப்பலாக பந்துவீசி, தீபக் சாகர் பல பவுண்டரிகளை தெறிக்க விட்டார்.

அதாவது, தீபக் சாகர் முதலில் 26 பந்துகளில் வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதன் பிறகு அற்புதமாக ஆடிய அவர் இறங்கி இறங்கி அடித்து தெறிக்கவிட்டார். 

முக்கியமாக, கடைசி 2 ஓவர்களில் 15 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. பின்னர்,  கடைசி 7 பந்தில் 7 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை உருவான போது, புவனேஸ்வர் ஒரு பவுண்டரி அடிக்க, இந்திய இளம் படையின் கூடாரமே குதூகலமாகிப்போனது. 

பின்னர், கடைசி ஓவரின் முதல் பாலை எதிர்கொண்ட தீபக் சாகர் பவுண்டரி அடித்து, அணியின் வெற்றிக்கு வித்திட்டு, ஆட்டைத்தை முடித்தே வைத்தார். 

இதனால், 49.1 ஓவரில் இந்திய அணி இலக்கை எட்டிய பிடித்தது வெற்றி வாகை சூடியது. அதன் படி, தீபக் சஹார் 69 ரன்களுடனும், புவனேஷ்வர் குமார் 19 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

இந்த போட்டியில், தீபக் சஹார் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதனால், இந்திய அணியின் இளம் படை, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றியை ருசித்துள்ளது.

இதனிடையே, இங்கிலாந்தில் டெஸ்ட் தொடருக்காக சென்றுள்ள இந்திய அணியின் மூத்த வீரர்கள், அங்கு இருந்தபடியே, இந்தியா - இலங்கை ஒருநாள் போட்டியைப் பார்த்து ரசித்து மகிழ்ந்தனர். இளம் காளைகளின் வெற்றியை மூத்த வீரர்கள் ரசித்த தருணங்கள் கொண்ட புகைப்படத்தை, பிசிசிஐ வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.