தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா இணைந்து நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கியுள்ளார். விரைவில் ரிலீசாக உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

மேலும் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் சார்பில் அடுத்தடுத்து திரைப்படங்களை தயாரித்து வருகின்றனர். முன்னதாக ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான கூழாங்கல் திரைப்படம் பல சர்வதேச விருதுகளை வாங்கிக் குவித்ததோடு ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பாக நேரடியாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் பிக் பாஸ் கவின் கதாநாயகனாக நடிக்கும் ஊர்க்குருவி, நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் ஹாரர் த்ரில்லர் திரைப்படமான கனெக்ட் ஆகிய படங்களும் தயாராகி வருகின்றன. அந்த வகையில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான அதிரடி ஆக்ஷன் படமான ராக்கி திரைப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் வழங்குகிறது.

இயக்குனர் செல்வராகவன் முதல் முறை கதாநாயகனாக நடிக்கும் சாணிக் காயிதம் படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரனின் முதல் திரைப்படமான ராக்கி படத்தில் தரமணி பட நடிகர் வசந்த் ரவி மற்றும் பாரதிராஜா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, பிரபல டப்பிங் கலைஞர் ரவீனா ரவி, நடிகை ரோகினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

RA ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள ராக்கி படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில், தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இந்நிலையில் ராக்கி திரைப்படம் வருகிற டிசம்பர் 23ஆம் தேதி முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.