பா. ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நந்திதா. அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்தில் நடித்து அசத்தினார். முண்டாசுப்பட்டி, உப்பு கருவாடு, தேவி 2 போன்ற படங்களில் நடித்தார். சிபிராஜ் நடிப்பில் உருவான கபடதாரி படத்திலும் நடித்துள்ளார் நந்திதா. 

அதிரடி ஆக்‌ஷன் படங்களில் கதாநாயகிகள் நடிப்பது இப்போது ட்ரெண்ட். மேலும் பெண்களை மையப்படுத்திய கதைகள் தமிழ்சினிமாவில் இப்போது அதிகமாக வரத்துவங்கியுள்ளது. சஸ்பென்ஸ் ஹாரர் என நிறைய படங்கள் பெண்களை மையப்பாத்திரங்களாக கொண்டு வெளியாகி வருகின்றன. இப்படியிருக்க நடிகை நந்திதா ஸ்வேதா நடிப்பில் ஐபிசி 376 என்ற ஆக்‌ஷன் ஹாரர் கலந்த மாஸ் கமர்சியல் படம் உருவாகியுள்ளது. 

படத்தில் பிரத்தியேக புகைப்படங்கள் வெளியான போதே இதில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்த்தனர் ரசிகர்கள். நான்கு சண்டைக்காட்சிகள் உள்ள இப்படத்தில் பெரும்பாலும் டூப் இல்லாமலே துணிச்சலாக நடித்துள்ளாராம் நந்திதா ஸ்வேதா. சூப்பர் சூப்பராயன் அமைத்த சண்டைக்காட்சிகள் மிகச்சிறப்பாக வந்துள்ளதாக சமீபத்தில் தகவல் கிடைத்தது. சண்டைக்காட்சிகளில் நந்திதா ஸ்வேதாவுக்கு ரத்தக்காயம் ஏற்பட்ட போதும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஒத்துழைப்பு தந்தார் எனவும் கோலிவுட் வட்டாரம் பேசியது. 

ஹாரர் சேஸிங், சஸ்பென்ஸ், ஆக்‌ஷன் என கதை திரைக்கதை எழுதி படத்தை இயக்கியுள்ளார் ராம்குமார் சுப்பாராமன். இப்படம் பெண்களைப் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பில் உள்ள ஐபிசி 376 என்பது பெண்கள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிரான சட்டத்தைக் குறிக்கிறது.

இப்படத்தில் கே.தில்ராஜ் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். எடிட்டர் நிர்மல் எடிட்டிங் பணியை கவனிக்கிறார். பவர்கிங் ஸ்டுடியோ சார்பாக எஸ்.பிரபாகர் படத்தை தயாரித்துள்ளார். தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் லாக்டவுனுக்கு முன்பே நிறைவடைந்தது. சமீபத்தில் தமிழக அரசு போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகளுக்கு அனுமதி அளித்ததால், இப்படத்தின் டப்பிங் வேலைகளும் நிறைவடைந்தது. தற்போது இதன் ட்ரைலர் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. திகில் கலந்த இந்த ட்ரைலரை இசையமைப்பாளர் தமன் வெளியிட்டார்.