மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் சுரேஷ் கோபி. இவர் தமிழில், அஜித் நடித்த தினா, சமஸ்தானம், ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த ஐ போன்ற படங்களில் நடித்துள்ளார். இப்போது விஜய் ஆண்டனி நடிப்பில் பாபு யோகேஸ்வரன் இயக்கி வரும் தமிழரசன் படத்தில் நடித்துவருகிறார்.

நடிகரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சுரேஷ் கோபி, நிமோனியா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எர்ணாகுணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 4 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுரேஷ் கோபி தற்போது பாப்பன் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். 

இயக்குனர் ஜோசி இயக்கும் இப்படத்தின் சூட்டிங் எர்ணாகுளம் பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சுரேஷ் கோபிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தற்போது சுரேஷ் கோபிக்கு ஏற்பட்டிருக்கும் நிமோனியா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நடைபெற உள்ள கேரள சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் திருச்சூர் அல்லது திருவனந்தபுரம் தொகுதிகளில் சுரேஷ் கோபி வேட்பாளராக நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது. 

இந்த சமயத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்கள், ஆதரவாளர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வாழ்த்தி வருகின்றனர் திரை ரசிகர்கள்.