லியோ படத்தில் தளபதி விஜயின் கேரக்டர் பெயரை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்... ருசிகர தகவலால் ரசிகர்கள் கொண்டாட்டம்!

லியோ படத்தில் விஜயின் கேரக்டர் பெயரை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்,lokesh kanagaraj revealed thalapathy vijay character in leo movie | Galatta

ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் தளபதி விஜயின் லியோ திரைப்படத்தில் அவரது கேரக்டரின் பெயரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு இருக்கிறார். இதுவரை தளபதி விஜயின் திரைப்பயணத்தில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய திரைப்படமாக அறிவிப்பு வருவதற்கு முன்பிருந்தே எக்கச்சக்கமாக எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் என்றால் அது அவரது 67-வது திரைப்படமாக அடுத்த மாதம் (அக்டோபர் 19) வெளிவர இருக்கும் இந்த லியோ படம் தான். தனக்கென தனி பாணியில் பக்கா ஆக்சன் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் இண்டஸ்ட்ரி ஹிட்டாக 500 கோடி ரூபாய் வரை வசூலித்த நிலையில், மாஸ்டர் திரைப்படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு மீண்டும் தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து இருப்பதால் லியோ திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக மாஸ்டர் திரைப்படம் 50 சதவீதம் லோகேஷ் படம் 50 சதவீதம் தளபதி விஜய் படம் என இருந்த நிலையில் இந்த லியோ திரைப்படம் 100 சதவீதம் லோகேஷ் படமாக இருக்கும் என ஏற்கனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருப்பதால் இன்னும் எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்திருக்கும் திரிஷா லியோ திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் SS.லலித்குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படம் வருகிற ஆயுத பூஜை வெளியிடாக அக்டோபர் 19ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர். இதனிடையே நாளை செப்டம்பர் 28ஆம் தேதி லியோ திரைப்படத்தின் 2வது பாடலாக BADASS என்ற பாடல் வெளிவர இருக்கிறது. இந்த நிலையில் லியோ திரைப்படத்தில் தளபதி விஜயின் கேரக்டர் பெயர் லியோ தாஸ் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர். "BADASS-மா லியோ தாஸ்-மா" எனக் குறிப்பிட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதிவிட்டு இருக்கிறார். ஏற்கனவே சஞ்சய் தத்தின் கதாபாத்திரம் ஆண்டனி தாஸ் என்றும் ஆக்சன் கிங் அர்ஜுனனின் கதாபாத்திரம் ஹெரால்டு தாஸ் என்றும் அறிவிக்கப்பட்டதால் அவர்கள் இருவரும் அண்ணன் தம்பிகளாக இருக்கிறார்கள் என ஒரு முடிவுக்கு வந்த ரசிகர்கள், தற்போது மற்றொரு சகோதரராக தளபதி விஜய், லியோ தாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் இன்னும் சுவாரசியம் கூடியிருப்பதாக உற்சாகமடைந்திருக்கின்றனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அந்த பதிவு இதோ...
 

#Badass ma#LeoDas ma#LEO 🔥🧊 pic.twitter.com/XQpCkQJ5p2

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) September 27, 2023