நொடிக்கு நொடி சுஷாந்த் சிங்கின் தற்கொலை மரணத்திற்குப் பின்னால் உள்ள காரணங்கள் மர்ம முடிச்சுகள் போல தொடர்ந்து கொண்டே போகின்றது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணம் குறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து 46 பேருக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினார்கள். இந்நிலையில் சுஷாந்தின் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து சுஷாந்த் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. 

சுஷாந்தின் காதலியான பாலிவுட் நடிகை ரியா சக்ரபர்த்தி தான் பணம், பட வாய்ப்புகளுக்கு ஆசைப்பட்டு அவருக்கு அதிக டோஸ் மருந்துகள் கொடுத்ததுடன், தற்கொலைக்கு தூண்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுஷாந்தின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 15 கோடி டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டதாக அவரின் தந்தை பாட்னா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. 

சுஷாந்தின் பண விவகாரம் குறித்து விசாரணைக்கு வருமாறு அமலாக்கத் துறை ரியாவுக்கு சம்மன் அனுப்பியது. அவர் நேரில் ஆஜராக கூடுதல் அவகாசம் கேட்டார். ஆனால் அமலாக்கத் துறை அதிகாரிகள் கூடுதல் அவகாசம் அளிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து ரியா இன்று நேரில் ஆஜரானார்.

இதற்கிடையே சுஷாந்தை வைத்து பவித்ர ரிஷ்தா தொலைக்காட்சி தொடரை இயக்கியவர்களில் ஒருவரான குஷால் ஜாவேரி இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நான் சுஷாந்துடன் தங்கியிருந்தேன். 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மீ டூவின் போது தான் சுஷாந்த் மிகவும் கவலையில் இருந்தார். எலக்ட்ரானிக் மீடியா சரியான ஆதாரம் இல்லாமல் அவரை டார்கெட் செய்தது. சஞ்சனா சங்கியை தொடர்பு கொள்ள நாங்கள் முயற்சி செய்தோம். ஆனால் அவர் அமெரிக்காவில் இருந்தார், கருத்து தெரிவிக்கவில்லை.

தன்னை யார் டார்கெட் செய்வது என்று சுஷாந்துக்கு தெரியும். ஆனால் ஆதாரம் இல்லாததால் அவர்களின் பெயர்களை வெளியிட முடியவில்லை. தன் மீதான புகார்கள் குறித்து சஞ்சனா விளக்கம் அளிக்கும் வரை நான்கு நாட்களாக சுஷாந்த் தூங்கவே இல்லை. அது இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. ஒரு வழியாக 5வது நாள் சஞ்சனா விளக்கம் அளித்தார். கஷ்டப்பட்டு ஜெயித்தது போன்று இருந்தது என்றார். சின்னத்திரை மூலம் நடிகர் ஆன சுஷாந்துக்கு பவித்ர ரிஷ்தா தொடர் மூலம் தான் பெயரும், புகழும் கிடைத்தது. 

சுஷாந்த் இறப்பதற்கு முன்பு முகேஷ் சப்ரா இயக்கத்தில் தில் பேச்சாரா படத்தில் நடித்திருந்தார். அந்த படம் கடந்த மாதம் 24ம் தேதி ஓடிடியில் வெளியானது. ஓடிடியில் வெளியான 24 மணிநேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட படம் என்கிற சாதனையை படைத்தது தில் பேச்சாரா. அந்த படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட் ஜோடியாக சஞ்சனா சங்கி நடித்திருந்தார்.