தமிழ்நாட்டுக்கு அதிக மழைப்பொழிவை தருவது வடகிழக்கு பருவமழைதான் என்றாலும், தென்மேற்கு பருவமழை சரியாக பெய்தால்தான் தமிழ்நாட்டு அணைகளுக்கான நீர்வரத்து அதிகரிக்கும். அதைவைத்தே அந்த ஆண்டுக்கான விவசாய பாசனம், குடிநீர் தேவை ஆகியவற்றை தமிழ்நாடு பெருமளவு பூர்த்தி செய்யும்.

அந்தவகையில் கடந்த சில நாள்களாக தென்மேற்கு பருவமழை வலுத்துள்ளதன் காரணமாக பல்வேறு அணைகள் வேகமாக நிரம்பிவருகின்றன.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தத்து. அந்தவகையில் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 58.1 செ.மீ மழை கொட்டித்தீர்த்துள்ளது.கூடலூரில் 37.5 செ.மீ மழையும், மேல் பவானியில் 31.9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. நீலகிரியில் நள்ளிரவு முதல் வழக்கத்தை விட இரு மடங்கு கூடுதலாக 322.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

இதனால் நீலகிரி, நொய்யல் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. நீலகிரி மாவட்டத்தில் மழையால் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர். தேவையில்லாமல் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள சூழலில் தமிழக மாவட்டங்களுக்கு அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் ஏற்பட்டு காற்றழுத்த தாழ்வு நிலையால் தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. முன்னதாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக உண்டான மழையால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.

இந்நிலையில்தான் தமிழகத்தின் நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல் மற்றும் வேலூரில் கனமழை வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை துவங்கியதன் காரணமாக முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் 6 அடி உயர்ந்து 123 அடியாக அதிகரித்தது. வைகை அணயின் நீர்மட்டம் 31 அடியாகவும், சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 76 அடியாகவும் அதிகரித்துள்ளது. இதனால் சுற்று வட்டாரப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அமராவதி அணையிலிருந்து இன்று முதல் பாசனம், குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அணையிலிருந்து மதகு வழியாக கரூர் நகரம் வரை 11 நாள்களுக்கு 1110 மில்லியன் கன அடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிரதான கால்வாய் வழியாக 15 நாள்களுக்கு 570 மில்லியன் கன அடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தேனி மற்றும் முல்லை பெரியாறு நீர் பிடிப்பு பகுதியில் பெய்துவரும் கனமழையால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், காவிரியின் குறுக்கே உள்ள கிருஷ்ண ராஜசாகர், ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைக்கு நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்துள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக கர்நாடகாவிலுள்ள கபிணி, கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு 44700 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீர் இன்று மாலை தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஒகேனக்கல் ஆற்றில் குளிக்கவும், படகு இயக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது