திரையுலகில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம், ரஜினிமுருகன், ரெமோ போன்ற ஹிட் படங்களில் நடித்து அசத்தினார். மகாநதி படத்தின் வெற்றிக்கு பிறகு உலகளவில் பிரபலமான நடிகையாகிவிட்டார் கீர்த்தி சுரேஷ். சிறந்த நடிப்பிற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. அதன் பின் பல பாலிவுட் பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தது. சென்ற வருடம் இவர் நடித்த பெண்குயின் திரைப்படம் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின் மிஸ் இந்தியா படத்திலும் நடித்திருந்தார். 

கீர்த்தி சுரேஷின் அக்கா ரேவதி இன்ஸ்டாகிராமில் உருக்கமான போஸ்ட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 

என் வாழ்க்கை முதுவதும் நான் எடை பிரச்சனையுடன் போராடி வருகிறேன். என் அம்மா மற்றும் தங்கையுடன் ஒப்பிட்டு என்னை விமர்சித்திருக்கிறார்கள். அதனால் நான் டீனேஜராக இருந்தபோது நான் என் அம்மா, தங்கை போன்று அழகில்லை என்று நினைத்தேன். நான் நார்மல் இல்லை, ஏதோ சரியில்லை என்று நினைத்தேன். மக்களின் பேச்சால் அதை நம்பினேன். 

என் கணவர் ப்ரொபோஸ் செய்தபோது என்னிடம் எதை கண்டார் என வியந்தேன். கமெண்ட் அடிக்க, அறிவுரை வழங்க, டயட் திட்டத்தை கூற மக்கள் தயங்கியதே இல்லை. பழக்கம் இல்லாதவர்கள் கூட எடை குறைப்பு பற்றி பேசினார்கள்.

என் அம்மாவும், தங்கையும் எவ்வளவு அழகாக இருக்கிறார்கள் என்று ஒரு பெண் புகழ்ந்தார். அதை கேட்டு நான் நன்றி சொன்னபோது, உனக்கு என்ன ஆனது என கேட்டார். மணிக்கணக்கில் கண்ணாடி முன்பு நின்று எனக்கு என்ன பிரச்சனை என வியந்தது உண்டு. ஒரு கட்டத்தில் என்னை நானே வெறுத்தேன். சந்தோஷமாக இருக்க தகுதியில்லாதவள் என நினைத்தேன்.

வேலையும், பொறுப்புகளும் என்னை பிசியாக வைத்தபோதிலும் நான் அழகாக உணர்ந்தது இல்லை. என் தங்கை எப்பொழுதும் என் பக்கம் தான். என்னை மோசமாக பேசுபவர்களிடம் இருந்து காப்பாற்றினார். நீ தான் என்னை விட அழகு என என் தோழிகள் கூறுகிறார்கள் அக்கா என்று என் தங்கை ஒரு முறை கூறினார். அதை கேட்டு நான் சிரித்தேன். நான் அழகான, தைரியமான, திறமையான பெண் என்று அம்மா அடிக்கடி கூறினார். என் கணவரும் அதையே சொன்னபோது தான் வியந்தேன்.

நான் என் மீது நம்பிக்கை வைக்காதபோது என் யோகா டீச்சர் தாரா சுதர்ஷன் என்னை நம்பினார். எனக்குள் இருக்கும் பலத்தை புரிய வைத்தார், நல்லதை சுட்டிக் காட்டினார், நான் அழகானவள் என்பதை புரிய வைத்தார். அதற்கு யாருடைய ஒப்புதலும் தேவையில்லை என்பதை புரிய வைத்தார். 20 கிலோவுக்கும் மேல் எடையை குறைத்தது தான் என் முதல் சாதனை. இந்த சாதனையை என் குரு தாரா சுதர்ஷனுக்கு டெடிகேட் செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.

ரேவதி சுரேஷின் இந்த சாதனையை பாராட்டி புகழாரம் சூட்டி வருகின்றனர் கீர்த்தி ரசிகர்கள்.