இந்திய சினிமாவில் சம கால நடிகர்களில் அனைத்து மொழி ரசிகர்களால் விரும்பப்படும் நடிகராகவும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஸ்டாராகவும் வலம் வருபவர் தனுஷ். தமிழ், இந்தி, தெலுங்கு என்று இந்திய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து இந்தியா முழுவதும் தன் ரசிகர் வட்டத்தை பெருக்கிய தனுஷ் ஆங்கில படங்களிலும் நடித்து இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார். இந்த ஆண்டு அவர் நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் உருவாகி வெளியான வாத்தி திரைப்படம் வசூல் ரீதியாவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இந்த ஆண்டின் வெற்றி படங்களின் வரிசையில் இருந்து வருகிறது. தற்போது தனுஷ் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். மும்முரமாக நடைபெற்று வரும் கேப்டன் மில்லர் திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இப்படத்தையடுத்து தனுஷ் இயக்குனர் மாரி செல்வராஜ் கூட்டணியில் சொந்த தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும் எச் வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே தனுஷ் அவர்கள் அவரது 50வது படத்தை அவரே இயக்கி நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது. பான் இந்திய திரைப்படமாக உருவாகும் ‘D50’ திரைப்படம் வடசென்னை கதைக்களத்தில் உருவாகும் என்று தகவல் வெளியாகியிருந்தது. இதில் எஸ் ஜே சூர்யா, விஷ்ணு விஷால், சந்தீப் கிஷன் ஆகியோர் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து படக்குழு சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அவர்களை நடிக்க கேட்டதாகவும் அவர் தேதி இல்லாமல் மறுத்து விட்டதாகவும் அந்த கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவுள்ளார் என்றும் தகவல்கள் இணையத்தில் சில தினங்களாக பரவி வருகிறது.இதனை அறிந்து கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அந்த செய்தியை பகிர்ந்து அதில் “இது தவறான செய்தி, அது போன்ற பட வாய்புகள் என்னிடம் வரவில்லை. தனுஷ் அற்புதமானவர் நான் அவருக்கேன்றால் முடியாது என்று சொல்ல மாட்டேன்” என்று குறிப்பிட்டு பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதையடுத்து கங்கனா ரனாவத் அவர்களின் பதிவு ரசிகர்களால் வைரலாகி வருகிறது.
கங்கனா ரனாவத் தற்போது எமெர்ஜென்சி என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். மேலும் தமிழில் பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.