துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக கால் பதித்தவர் கார்த்திக் நரேன். இவரது இயக்கத்தில் அடுத்ததாக நரகாசூரன் திரைப்படம் உருவானது. சில காரணங்களால் இப்படம் ரிலீஸாகாமல் இருந்தது. இயக்கம் தவிர்த்து கண்ணாடி எனும் படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு அருண் விஜய் மற்றும் பிரசன்னா வைத்து மாஃபியா எனும் படத்தை இயக்கினார். 

இதைத்தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படம் D43. ஜிவிபிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த பட்டாஸ் படத்தை தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனமே இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. படத்தில் நடிகர் பிரசன்னா முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். க்ரைம் திரில்லரான இந்த படத்தில் ஷரஃபு மற்றும் சுஹாஸ் திரைக்கதை எழுதுகின்றனர்.

இந்நிலையில் இத்திரைப்படம் குறித்த ஆடியோ அப்டேட்டை இசையமைப்பாளர் ஜிவிபிரகாஷ் பதிவு செய்துள்ளார். D43 படத்தின் ஆடியோ அற்புதமாக வந்துகொண்டிருப்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார் ஜிவி பிரகாஷ். இப்படத்தில் நடிகர் தனுஷ் பாடல் வரிகள் எழுதியுள்ளார் என்ற தகவல் சமீபத்தில் சிக்கியது.  

இந்நிலையில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ஜிவி பிரகாஷ், தனுஷின் 43-வது படத்திற்கு வேற லெவல் பாடல்கள் கம்போஸ் செய்து ரெடியாகிவிட்டன. பாடல்களை தனுஷ் மற்றும் கவிஞர் விவேக் எழுதியுள்ளனர். லாக்டவுன் முடிந்த பிறகு,  இதுகுறித்த அறிவிப்புகள் வரும் என அவர் பதிவு செய்துள்ளார். இந்த தகவல் தனுஷ் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது. 

அசுரன், சூரரைப் போற்று போன்ற படங்களுக்கு பிறகு இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைப்பதால் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர் திரை விரும்பிகள். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் திரைப்படத்தின் பாடல் அப்டேட் வெளியானது. இந்த படம் லாக்டவுன் முடிந்த பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்துள்ளார் தனுஷ்.