தமிழ் திரையுலகில் தாகம் தீரா கலைஞர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். நடிகர், பாடலாசிரியர், பாடகர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்து என்டர்டெயின் செய்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். விவேக் ஹர்ஷன் எடிட்டிங் செய்கிறார். லண்டன், சென்னை, மதுரை போன்ற பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. தனுஷ் கிடா மீசையில் சுருளி எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். பிளாஷ்பாக் காட்சியில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சஞ்சனா நட்ராஜன் நடித்துள்ளார். 

படத்தின் விநியோக பங்குதாரராக ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது. படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி பட்டையை கிளப்பியது. இந்த ஆண்டு மே 1-ம் தேதி வெளியாகவிருந்த இந்த படம் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் இதன் ரிலீஸ் தேதி தெரியவில்லை. தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஜூலை மாதம் முழுவதும் தரமான அப்டேட்டுகளுடன் வரவிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர். 

முதல் பாடலான ரகிட ரகிட பாடல்  குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வெளியான மோஷன் போஸ்டரில் இந்த பாடல் தான் இடம் பெற்றிருக்கும் என்பது கூடுதல் தகவல். 

தற்போது இந்த படத்தின் ஆடியோ உரிமம் குறித்த தகவல் வெளியானது. சோனி மியூசிக் சவுத் இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை கைப்பற்றியுள்ளனர். தளபதி விஜய் நடித்த மாஸ்டர், சூர்யா நடித்த சூரரைப் போற்று, சியான் விக்ரமின் கோப்ரா, சிவகார்த்திகேயனின் டாக்டர் போன்ற பெரிய பட்ஜெட் படங்களின் ஆடியோவை சோனி நிறுவனம் தான் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.