திரையுலகின் கிளாஸான இயக்குனர் என்றால் அது கெளதம் மேனன் தான். கெளதம் மேனன் படங்களை இயக்கி வெளியிடுவதில் சில வருடங்களாக தாமதம் ஏற்படுத்தி வருகிறார் என்ற பேச்சுகள் இருந்தாலும், நடிகராக அவதாரம் எடுத்து அசத்தி வருகிறார். கடந்த ஆண்டில் ஓ மை கடவுளே, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ட்ரான்ஸ், பாவ கதைகள் (வான் மகள்) என தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். 

கடந்த ஆண்டு அன்வர் ரஷீத் இயக்கத்தில் வெளியான ட்ரான்ஸ் எனும் மலையாளம் படத்தில் நடிகர் ஃபஹத் ஃபாசிலுக்கு வில்லனாக நடித்திருந்தார் GVM. யாரும் எதிர்பாராத வகையில், அந்த கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பும், பாராட்டுகளையும் பெற்றது. கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா என இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்று இந்த கூட்டணி தரமான கூட்டணியாக அமைந்தது. 

இந்நிலையில் சிலம்பரசன் நடிக்கும் பத்து தல படத்தில் வில்லன் ரோலில் நடிக்கவுள்ளார் கெளதம் மேனன். சிம்பு மற்றும் கெளதம் மேனன் வரும் காட்சிகள் திரையரங்கை அதிர வைக்கும் என்றே கூறலாம். கலாட்டா நேர்காணலில் பேசிய தயாரிப்பாளர் K.E. ஞானவேல்ராஜா இதை உறுதி படுத்தியுள்ளார். 

கன்னடத்தில் நார்தன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் முஃப்தி. 2017ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் தான் பத்து தல. இந்த படத்தை ஓபிலி என்.கிருஷ்ணா இயக்குகிறார். பிரியா பவானி சங்கர், டீஜே அருணாச்சலம், மனுஷ்ய புத்திரன், கலையரசன் ஆகியோர் நடிக்கின்றனர். 

இசைப்புயல் AR ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. நாற்காலியில் சிலம்பரசன் அமர்ந்திருப்பது போன்று போஸ்டர் இடம்பெற்றிருந்தது. படத்திற்கு ராஜீவன் கலை இயக்கம், ராமகிருஷ்ணன் வசனம், பூபதி செல்வராஜ் எடிட்டிங், அன்பறிவு ஸ்டண்ட் பணிகள் மேற்கொள்கிறார்.