நாட்டில் வருகிற பிப்ரவரி மாதத்தில் ஒமிக்ரான் பாதிப்புகளால் 3-வது அலை ஏற்படும் என கொரோனா நிபுணர் குழு எச்சரிக்கை விடுத்து உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று பரவல் உலக நாடுகளை ஆட்டி படைத்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் கடந்த ஆண்டு கண்டறியப்பட்டாலும், நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிக உச்சம் தொட்டது.  

இதற்கு உருமாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோனா காரணம் என கூறப்பட்டது.  இதனால் 2-வது அலை நாட்டில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றது.

அதன்பின்னர் டெல்டா பிளஸ் உள்ளிட்ட கொரோனா வகைகள் கண்டறியப்பட்டாலும் பெரும் தாக்கம் எதுவும் ஏற்படுத்தவில்லை.  சமீப நாட்களாக நாடு முழுவதும் பாதிப்புகள் குறைந்து வருகின்றன.  இந்நிலையில் கொரோனா 3-வது அலை சாத்தியம் என நிபுணர்கள் கூறியுள்ளனர். 

இதுபற்றி தேசிய கொரோனா சூப்பர்மாடல் குழுவின் தலைவர் வித்யாசாகர் கூறும்போது, “இந்தியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 3-வது அலை ஏற்பட கூடும்.  

தற்போது நோயெதிர்ப்பு சக்தி அதிக அளவில் மக்களிடம் உள்ளது.  அதனால் 2-வது அலையை விட இந்த அலை லேசாகவே பாதிப்புகளை ஏற்படுத்தும்.

நாட்டில் 3-வது அலை நிச்சயம் ஏற்படும்.  நாள் ஒன்றுக்கு 7,500 கொரோனா பாதிப்புகள் தற்போது உறுதி செய்யப்பட்டு வருகின்றன.  டெல்டாவுக்கு பதிலாக ஒமிக்ரான் அந்த இடத்திற்கு வரும்போது, இந்த எண்ணிக்கை உயரப் போவது உறுதி” இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

omicron third wave in india

முன்னதாக நிதி ஆயோக் சுகாதார  உறுப்பினரும், கொரோனா தடுப்புப் பிரிவு தலைவருமான வி.கே. பால், ஒமிக்ரான் பரவல் காரணமாக இந்தியாவில் தினசரி 14 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
 
இதுகுறித்து கொரோனா தடுப்புப் பிரிவு தலைவர் வி.கே. பால் கூறியதாவது:

“ஐரோப்பிய நாடுகளில் புதிய கொரோனா அலை உருவாகியிருக்கிறது. கடந்த சில நாட்களாகவே அங்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருக்கிறது. 

டெல்டாவும், ஒமிக்ரானும் இணைந்து புதிய அலையை உருவாக்கியுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலான மக்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டும், அங்கு நிலைமை மோசமடைந்துள்ளது. 

இங்கிலாந்தில் வியாழனன்று 80,000 பேருக்கு ஒமிக்ரான் தொற்றியிருக்கிறது. அங்கு தடுப்பூசி முறை எப்படி என்று நாம் அறிவோம். இவையெல்லாம் உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான். 

பிரிட்டனில் பரவி வரும் வேகத்தையும், எண்ணிக்கையையும் பார்க்கும் போது இந்தியாவில் இதேவேகத்தில் பரவினால் இங்கு இருக்கும் மக்கள் தொகை நெருக்கத்துக்கு 14 முதல் 15 லட்சம் பேர் வரை தினசரி பாதிக்கப்படுவார்கள். 

இரண்டு  டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொண்டவர்களையும் ஒமிக்ரான் விட்டு வைக்கவில்லை. பிரான்சில் 80 சதவிகிதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்ட போதிலும் 65,000 பேருக்கு ஒமிக்ரான் தொற்றியுள்ளது.

பிரான்ஸ் போன்று இந்தியாவிலும் இதேபோன்ற ஒரு பரவல் ஏற்பட்டால், நமது மக்கள் தொகையைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் 13 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்.

இது இன்னமும் கூட வளர்ந்து வரும் எதிர்பாரா சூழல் என்ற மட்டத்தில்தான் இருக்கிறது. அரசு நிலைமைகளை கண்காணித்து வருகிறது. ஒமிக்ரான் மிதமான அளவில்தான் தொற்றி வருகிறது.

ஒவ்வொரு கொரோனா பரிசோதனை சாம்பிளையும் ஜெனோம் வரிசைப்பாடு செய்வது கடினம். அது கண்காணிப்பு, பெருந்தொற்று பரவல் எச்சரிக்கை உத்தியாகும். அதை வைத்து நோய்க்கணிப்பு செய்ய முடியாது. 

omicron third wave india

ஆனால் முறையான சாம்பிள் டெஸ்ட்கள் உண்டு என்பதை உறுதி அளிக்கிறோம். பொதுவெளியில் வரும் தகவல்களை நீங்கள் அறிவீர்கள்.  ஒமிக்ரான் நிலவரம் பிரிட்டன், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் வேகமாகப் பரவி வருவதை அறிவீர்கள்.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 20 நாட்களாக 10,000-த்திற்கும் கீழ் குறைந்திருக்கிறது என்றாலும் நாம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. 

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கும் நாடுகளில் ஒமிக்ரான் தொற்றும் அதிகரித்து வருவதை நாம் பார்க்கிறோம்.

மத்திய அரசு இப்போதே கடும் கட்டுப்பாடுகளை விதிப்பது நல்லது.  வெளியூர் பயணம், கூட்டமான இடங்களுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். 

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை பொது இடங்களில் கொண்டாடாமல் சிறிய அளவில் வீடுகளில் கொண்டாடுவது நல்லது. டெல்டா வைரசை விட ஒமிக்ரான் அதிவேகமானது என்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்” இவ்வாறு வி.கே. பால் தெரிவித்திருந்தார்.