தஞ்சாவூர் மாவட்டம் வடசேரியில் 1959-ம் ஆண்டு மே 7-ம் தேதி பிறந்தவர் எஸ்.பி.ஜனநாதன். இயக்குனராக வேண்டும் என்று ஆசை கொண்டு பி.லெனின், பரதன், வின்சென்ட் செல்வா மற்றும் கேயார் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து அவருடைய இயக்கத்தில் வெளியான முதல் படம் இயற்கை.

இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இவர் இயக்கிய 'ஈ', 'பேராண்மை', 'புறம்போக்கு என்கிற பொதுவுடைமை' ஆகிய படங்களை இயக்கியுள்ளார் எஸ்.பி.ஜனநாதன். இவை அனைத்துமே புரட்சிகர கருத்துகளை உள்ளடக்கியவை. 

எஸ்.பி.ஜனநாதன் - விஜய் சேதுபதி கூட்டணியில் லாபம் திரைப்படம் உருவாகி வந்தது. இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 11-ம் தேதி எடிட்டிங் ஸ்டுடியோவில் இருந்து மதிய உணவு சாப்பிட வீட்டுக்குச் சென்றார். 

நீண்ட நேரமாகியும் ஸ்டுடியோவுக்கு திரும்பி வராததால் அவரது உதவியாளர் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது தனது அறையில் மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார் ஜனநாதன். உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சுயநினைவு திரும்பவில்லை. தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்த அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மரணம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

இதையடுத்து மார்ச் 15-ம் தேதி திங்களன்று சென்னை மயிலாப்பூரில் இறுதிச்சடங்கு நடைபெற்றது. விஜய் சேதுபதி உள்ளிட்ட திரையுலகினர் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். பின்பு மயிலாப்பூர் மின் மயானத்தில் ஜனநாதனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

எஸ்.பி.ஜனநாதன் மரணமடைந்து இரண்டு நாட்களே ஆன நிலையில் சோகம் தாங்காமல் மாரடைப்பு காரணமாக அவரது தங்கை லக்‌ஷ்மி இன்று உயிரிழந்தார். அடுத்தடுத்து இரண்டு மரணங்கள் அவரது குடும்பத்தினர் மத்தியிலும் திரைத்துறையிலும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.