உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயதான பட்டியலினப் பெண் ஒருவர் ஆதிக்க சாதியை சேர்ந்த 4 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். அப்பெண்ணின் நாக்கு வெட்டப்பட்டு, கழுத்து எலும்பு, முதுகெலும்பு ஆகியவற்றில் முறிவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில், டெல்லியில் உள்ள சாஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அப்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து, இறுதிச் சடங்கிற்காக அப்பெண்ணின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் போலீசாரே எடுத்துச் சென்று அவசர அவசரமாக நள்ளிரவில் தகனம் செய்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, ரவி, ராம்குமார், சந்தீப், லாவ் குஷ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உத்தரப்பிரதேச மாநில காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கை விசாரிக்க மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைத்துள்ளார். மேலும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

ஹத்ராஸ் பாலியல் விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் என அனைத்து தரப்பினரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருவதுடன், ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்துள்ளன. முன்னெச்சரிக்கையாக ஹத்ராஸ் மாவட்டத்தில் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து பதிவு செய்துள்ளார் பிரபல இயக்குனர் ராஜூமுருகன். குக்கூ, ஜோக்கர் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் ராஜு முருகன். 64-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது இவர் உருவாக்கிய ஜோக்கர் திரைப்படம். இயக்கம் அல்லாது சீரான எழுத்தாளரும் கூட. தோழா, மெஹந்தி சர்க்கஸ் போன்ற படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். 

ராஜூமுருகன் இயக்கத்தில் இந்த ஆண்டு ஜிப்ஸி திரைப்படம் வெளியானது. ஜீவா கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் நடாஷா சிங் ஹீரோயினாக நடித்தார். இவர்களுடன், நடனமாடும் குதிரை ஒன்றும் முக்கியக் பாத்திரத்தில் நடித்திருந்தது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். 

ஹத்ராஸ் பாலியல் கொடுமை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து ராஜூமுருகன் செய்த பதிவில் கூறியிருப்பதாவது, உத்திரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 22 வயது தலித் பெண், உயர் சாதி ஆண்களால் கொடூரமாக வல்லுறவு-கொலை செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகளை கைது செய்து நீதியை நிலைநாட்ட வேண்டிய அரசாங்கம், அவசரகதியில் உடல் எரிப்பு, குடும்பத்தினர் உரிமை மறுப்பு, 144 தடை என அடுத்தடுத்து பெரும் அநீதிகளை மேற்கொள்வது... ஜனநாயகத்தை கொன்று எரிக்கும் செயல்.

இதுவல்லாமல், குற்றம் செய்தவர்களுக்கு ஆதரவாக நால்வர்ண பரிஷத் என்ற அமைப்பு போராட்டக் களத்திற்கு வந்துள்ளது. உ.பி.யில் எம்.எல்.ஏ தொடர்புடைய வல்லுறவு, கொலை தொடங்கி, நீதிக்காக போராடிய பெண் எரிக்கப்பட்டது வரை பல மோசமான நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. நாமும் தொடர்ந்து கண்டிக்கிறோம்.

ஆனால், சாதி - ஆணாதிக்க வக்கிரப் போக்குகள் அன்றாட நிகழ்வாகியிருப்பதும் அதற்கு ஆதரவுக் குரல் எழுவதும் மனித மாண்புகளுக்கே விடப்பட்டிருக்கும் சவாலாகும். ஜனநாயக இந்தியாவை அழித்து உருவாக்கப்படும் அராஜக இந்தியா எத்தனை ஆபத்தானது என்பதை இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன என்று பதிவு செய்துள்ளார் ராஜு முருகன். 

இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் வெளியான ஜோக்கர் மற்றும் ஜிப்ஸி போன்ற படங்களில் நாட்டில் நடக்கும் பிரச்சனையை சுட்டிக்காட்டும் விதமாக காட்சிகளை வடிவமைத்திருப்பார். இதே போல் பல திரைப்பிரபலங்களும் இந்த சம்பவத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்து பதிவு செய்து வருகின்றனர்.