தமிழ் & மலையாள திரை உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராகவும் இயக்குனராகவும் வலம் வந்தவர் பிரதாப் போத்தன். மறைந்த இயக்குனர் பரதன் இயக்கத்தில் மலையாளத்தில் உருவான ஆரவம் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான பிரதாப் போத்தன், தொடர்ந்து இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கத்தில் உருவான அழியாத கோலங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் நடிகராக அறிமுகமானார்.

தொடர்ந்து வறுமையின் நிறம் சிவப்பு, மூடுபனி, நெஞ்சத்தை கிள்ளாதே, குடும்பம் ஒரு கதம்பம், ராம், படிக்காதவன், சர்வம், ஆயிரத்தில் ஒருவன், பெங்களூர் டேஸ், ரெமோ, ஃபாரன்சிக் உள்ளிட்ட திரைப்படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். கிட்டத்தட்ட தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பிரதாப் போத்தன் நடித்துள்ளார்.

நடிகராக மட்டுமல்லாமல் நல்ல இயக்குனராகவும் பல திரைப்படங்களை இயக்கியுள்ள பிரதாப் போத்தன் மீண்டும் ஒரு காதல் கதை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கி, ரிதுபேதம், டெய்சி, வெற்றிவிழா, மை டியர் மார்த்தாண்டன், சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன், ஒரு யாத்ரமொழி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான பிரதாப் போத்தன் இன்று ஜூலை 15ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 69. பிரதாப் போத்தன் அவர்களின் மறைவுக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது. மேலும் தென்னிந்திய திரையுலகை சேர்ந்த முன்னணி பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
 

Condolence to the family 🥀#PratapPothen #RIPPratapPothen pic.twitter.com/EJHYiWTsdr

— Galatta Media (@galattadotcom) July 15, 2022