பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மாபெரும் வரவேற்பிற்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த அடுத்த திரைப்படம் தான் “கர்ணன்”. தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த நடிகர்களுள் ஒருவராக இருக்கும் நடிகர் தனுஷ்  கதாநாயகனாக “கர்ணன்”  கதாபாத்திரத்தில் நடிக்க திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமானது.பொடியங்குலம் என்னும் ஒரு கிராமத்தில்  பேருந்து வசதி இல்லாமல் இருக்கும் மக்கள் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகள் அவர்களுக்கு எதிராக இருக்கும் அநீதிகள் சமுதாய ஏற்றத்தாழ்வுகள் என அனைத்தையும் கலந்து கட்டி ஒரு அழகான வாழ்வியலை படமாக்கினார் இயக்குனர் மாரி செல்வராஜ். 

நடிகர் தனுஷின் நடிப்பு மிக பொருத்தமாக அமைந்தது. கர்ணன் கதாபாத்திரத்தில் அவர் பேசும் எழுச்சி வசனங்கள் அனைத்தும் சிலிர்க்க வைக்கிறது. சந்தோஷ் நாராயணனின் இசையும் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவும் படத்திற்கு மேலும் மெருகூட்டுகிறது. கடந்த மாதம் 9-ம் தேதி தியேட்டரில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்த நிலையில்  இந்த மாதம் 14ஆம் தேதி அமேசான் பிரைம் OTT தளத்தில் திரைப்படம் வெளியானது. 

நடிகர் தனுஷ் ராஞ்சனா திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகராக அறிமுகமானார் இயக்குனர். ஆனந்த் எல் ராய் ராஞ்சனா திரைப்படத்தை இயக்கியிருந்தார். ராஞ்சனா திரைப்படத்திற்காக பாலிவுட்டின் சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றார் நடிகர் தனுஷ். இந்நிலையில் சமீபத்தில் கர்ணன் திரைப்படத்தை பார்த்த இயக்குனர் ஆனந்த் எல் ராய் மிகவும் வியந்து தனது ட்விட்டர் பக்கத்தில் கர்ணன் திரைப்படம் குறித்து மனமார பாராட்டியுள்ளார். 

அந்தப் பதிவில் கர்ணன் திரைப்படத்தை புகழ்ந்த இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்குனர் மாரி செல்வராஜின் காட்சி அமைப்புகள் பற்றியும் நடிகர் தனுஷ் ஒரு மாயாவி என்று புகழ்ந்துள்ளார். அடுத்ததாக தனுஷ் நடித்த பாலிவுட் திரைப்படமான அட்றாங்கி ரே திரைப்படத்தையும் ஆனந்த் எல் ராய் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் வெளிவர உள்ள அட்றாங்கி ரே திரைப்படத்தில்  நடிகர் தனுஷுடன் நடிகர் அக்ஷய்குமார் மற்றும் நடிகை சாரா அலி கான் இணைந்து நடிக்க  இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இசை அமைத்துள்ளார்.