தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் அடுத்ததாக தெலுங்கு-தமிழ் என இரு மொழிகளில் தயாராகும் வாத்தி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனரான வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் வாத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது.

முன்னதாக இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். 

மேலும் ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் பட இயக்குனர்கள் ரூஸோ சகோதரர்கள் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தி கிரேட் மேன் திரைப்படம் விரைவில் நேரடியாக நெட்ஃபிலிக்ஸில் ரிலீஸ் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளித்திரையில் முன்னணி கதாநாயகனாக திகழும் தனுஷின் திரைப்படப் பாடல்கள் யூட்யூப் ட்ரெண்டிங்கில் டாப் லிஸ்டில் இடம் பெறுவது வழக்கம்.

முன்னதாக ஒய் திஸ் கொலவெறி டி (309 மில்லியன்), டானு டானு (173 மில்லியன்), மறுவார்த்தை பேசாதே (133மில்லியன்) மற்றும் ரவுடி பேபி (1.3 பில்லியன்) ஆகிய பாடல்கள் யூட்யூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ள நிலையில் இந்த வரிசையில் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் அனிருத் இசையில் மாரி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தரலோக்கல் பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து தனுஷின் 100 மில்லியன் கிளப் பட்டியலில் இணைந்துள்ளது. மாரியின் தரலோக்கல் பாடல் இதோ…