இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு நீண்ட நாட்களாக ரசிகர்கள் காத்திருந்த வலிமை திரைப்படம் இன்று (பிப்ரவரி 24ஆம் தேதி) உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. அதிகாலை 4 மணி முதலே முதல் காட்சி ரசிகர்களுக்காக திரையிடப்பட்டது.

அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகி இருக்கும் வலிமை திரைப்படத்தை போனிகபூர் தயாரிக்க நீரவ்ஷா ஒளிப்பதிவில் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். திலிப் சுப்புராயன் ஸ்டன்ட் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தின் அனைத்து ஸ்டன்ட் ஆக்ஷன் காட்சிகளும் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆன திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்றுள்ளது. கோயமுத்தூரில் வலிமை திரைப்படம் 20 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் கோயமுத்தூரில் முக்கிய திரையரங்குகளில் ஒன்றான கங்கா யமுனா காவேரி திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகாலை முதல் காட்சி ஆரம்பிக்கப்பட்டு ரசிகர்கள் அனைவரும் திரையரங்கில் படம் பார்த்துக்கொண்டிருந்த போது தியேட்டரின் முன்னால் மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளார். இதனையடுத்து தியேட்டர் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை ஆரம்பித்துள்ளனர்.

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள அஜித்குமாரின் வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் நாளான இன்று (பிப்ரவரி 24ஆம் தேதி) கோயம்புத்தூரில் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்றது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.