தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் அருள்நிதி தனக்கே உரித்தான பாணியில் விதவிதமான ஆக்ஷன் த்ரில்லர், கிரைம் த்ரில்லர், ஹாரர் த்ரில்லர் & சைக்கலாஜிக்கல் த்ரில்லர் என தொடர்ந்து வித்தியாசமான த்ரில்லர் திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர்.

கடைசியாக ஜீவாவுடன் இணைந்து அருள்நிதி நடித்து வெளிவந்த களத்தில் சந்திப்போம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இயக்குனர் இன்னசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள டைரி திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 

இதனை தொடர்ந்து இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் கிரைம் திரில்லர் படமாக அருள்நிதி நடித்துள்ள திரைப்படமும் விரைவில் ரிலீஸாக தயாராகி வருகிறது. முன்னதாக தமிழகத்தின் பிரபல யூடியூப் சேனலான எருமசாணி யூடியூப் சேனல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த விஜய் விருஸ் இயக்குனராக களமிறங்கும் D BLOCK எனும் திரில்லர் திரைப்படத்திலும் அருள்நிதி கதாநாயகனாக நடித்துள்ளார். 

மேலும் அவந்திகா மிஸ்ரா கதாநாயகியாக நடிக்க உமா ரியாஸ், தலைவாசல் விஜய், கரு.பழனியப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். MNM பிலிம்ஸ் சார்பில் அரவிந்த் சிங் தயாரித்துள்ள D BLOCK படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வழங்குகிறது. அரவிந்த் சிங் ஒளிப்பதிவில், ரான் எத்தன் யோஹன் இசையமைத்துள்ளார்.

முன்னதாக வெளிவந்த D BLOCK திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வருகிற ஜூலை 1ஆம் தேதி D BLOCK திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.