மிருகம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமாகிய நடிகர் ஆதி, ஈரம் திரைப்படத்திற்கு பிறகு மிகுந்த பிரபலமடைந்தார். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் கதாநாயகனாகவும் முன்னணி கதாபாத்திரங்களிலும் வில்லனாகவும் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார்.

அந்த வகையில் இந்த ஆண்டு(2022) நடிகை கீர்த்தி சுரேஷின் குட்லக் சகி மற்றும் தடகளத்தை மையப்படுத்திய க்ளாப் என ஆதி நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து நடிகர் ஆதி மற்றும் நடிகை ஹன்சிகா இணைந்து நடித்துள்ள பார்ட்னர் திரைப்படம் விரைவில் வெளியாக தயாராகி வருகிறது.

இதனிடையே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் போத்தினேனி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள தி வாரியர் திரைப்படத்தில் நடிகர் ஆதி மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார். வருகிற ஜூலை 14ஆம் தேதி தி வாரியர் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.

முன்னதாக செலிபிரிட்டி காதல் ஜோடியான ஆதி-நிக்கி கல்ராணியின் நிச்சயதார்த்தம் சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில் தற்போது இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. புதுமண ஜோடிக்கு கலாட்டா குழுமம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.