லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான கைதி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அர்ஜுன் தாஸ். இவர் ஏற்று நடித்த பாத்திரம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இவரது குரலுக்கு ரசிகர்கள் அடிமையாகி விட்டனர் என்று தான் கூற வேண்டும். கைதி படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அர்ஜுன் தாஸ். 

அர்ஜுன் தாஸ் நடிப்பில் தயாராகியிருக்கும் திரைப்படம் அந்தகாரம். ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனம் சார்பாக இயக்குனர் அட்லீ தயாரித்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது.கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் முக்கிய ரோலில் நடித்த அர்ஜூன் தாஸ் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் வினோத் கிஷன், பூஜா ராமச்சந்திரன், மீஷா கோஷல் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். விஞாராஜன் இயக்கிய இந்த படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். 

இந்நிலையில் தளபதி ரசிகர் ஒருவர், மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் நாளில் இப்படி தான் இருக்கும் என்று எடிட்டிங் செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு பதிலளித்த அர்ஜுன் தாஸ், தியேட்டரில் டிக்கெட் புக்கிங்  திறந்ததும், நண்பர்களிடம் டிக்கெட்டை ரெடி பண்ண சொல்லுவோம், ஒரு மணிநேரம் முன்பே திரையரங்கிற்கு சென்று விடுவோம். காட்சி ஆரம்பிக்கும் வரை, திரையரங்கின் கதவுகள் திறக்கும் வரை தளபதி என்ற சத்தத்துடன் காத்திருப்போம். விலை மதிப்பில்லா அனுபவம் அது.. என்று பதிவிட்டுள்ளார். இதை தளபதி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

மாஸ்டர் படத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ளனர். லாக்டவுன் அறிவிப்பதற்கு முன்பே படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதிக எதிர்பார்ப்பில் உள்ள இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை துவங்கியுள்ளனர் படக்குழுவினர். மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. சமீபத்தில் பாடல்களின் கரோக்கி வெர்ஷனும் வெளியானது. 

ஏப்ரல் 9-ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக மாஸ்டர் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அதிகம் பரவிய காரணத்தினால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. அதனால் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர் தள்ளி வைத்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டு தான் இருக்கின்றன. மீண்டும் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றிய விவரமும் தெளிவாக இல்லை.

மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரும் நடிகர் விஜயின் மாமாவுமான சேவியர் பிரிட்டோ, சமீபத்தில் படத்தின் ரிலீஸ் குறித்து பேசியிருந்தார். மாஸ்டர் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், என்ன நடந்தாலும் அப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என்பதை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.