கடந்த 2015-ம் ஆண்டு வெளியான இன்று நேற்று நாளை திரைப்படம் மூலம் இயக்குனராக கால் பதித்தவர் ரவிக்குமார். ரவிக்குமார் இயக்கிய இந்த படத்தில் விஷ்ணு விஷால், கருணாகரன், மியா ஜார்ஜ் ஆகியோர் நடித்திருந்தனர். டைம் ட்ராவலை மையமாக கொண்டு உருவான இந்த படம், ரசிகர்களை பெரிதளவில் ஈர்த்தது. ஹாலிவுட் பாணியில் காட்சிகளை அமைத்து அசத்தியிருப்பார் இயக்குனர் ரவிக்குமார். 

இந்த வெற்றியை தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் அயலான். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். 24AM ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. கருணாகரன், இஷா கோபிகர், பாலசரவணன் ஆகியோர் உள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கடைசியாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்படத்தின் CG பணிகள் ஒருபக்கம் இருக்க, படப்பிடிப்பும் மீதம் உள்ளது போல் தெரிகிறது. கொரோனா பிரச்சனை முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் இந்த படம் குறித்த அப்டேட் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில், சர்வதேச இடது கையாளர்கள் தினமான இன்று, அசத்தலான பதிவு ஒன்றை செய்துள்ளார் ரவிக்குமார். அதில் இன்று உலக இடது கையாளர்கள் தினமாம். எதேனும் வேலை செய்துகொண்டிருக்கையில் அருகில் இருப்பவர்கள் ஆச்சரியமாக “நீங்க லெப்ட் ஹேண்டா... என்று கேட்கையில் நான் இடதுகைபழக்கம் உள்ளவன் என்பதை நினைவிட்டுகொள்வேன். ஆம் நானும் ஒரு இடது கையாளன்தான்.

இந்திய /தமிழ்நாட்டு இடதுகையாளர்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் உலக இடதுகையாளர்களுக்கே இருக்காது என்று நம்புகிறேன். ஏனென்றால் இருக்கும் இருகைகளில் இடது கையை தாழ்வாக பார்க்கும் மனநிலை நம்ம ஊரில்தான் இருக்கிறது. இதுபற்றி பண்டைய இலக்கியங்களில் குறிப்பு இருந்தால் சொல்லுங்கள். குறள் கூட ஒன்றும் இல்லை. வருத்தம்தான்.

உணவை இடதுகையால் எடுத்து சாப்பிடும்போதும், பென்சிலை இடது கையால் எடுத்து கிறுக்கும்போதும் அந்த கையில் அடித்து,அடித்து வலதுகைக்கு மாற்றி இளம்பிராயத்திலேயே மூளையை குழப்பிவிடுகிறார்கள். எனக்கும் அதுதான் நடந்தது. இவன் இடதுகைக்காரன் இவனை அப்படியே வளரவிடவேண்டும் என்ற எண்ணம் அப்போது இல்லை. இப்பொழுது கொஞ்சம் புரிதல் ஏற்பட்டிருப்பதாக பார்க்கிறேன். அந்த கரிசனம்கூட இடதுகைக்காரர்கள் ஏதோ பிறப்பிலேயே திறமைசாலிகள் என்ற போலியான எண்ணம் நிலவுவதன் காரணமாத்தான்.

பந்தியில் உணவு பரிமாறும் போது வலதுகையால்தான் உணவு போடவேண்டும் என்று வறுத்தெடுத்து வலதுகையால் ஊற்ற வைப்பார்கள் குறிதவறாமல் இலையில் ஊற்றுவது சாகசம். ஸ்கூல் டைம்ல வலதுகைக்காரர்களுக்கு ஏற்றவாறு லெக் சைடு கிரிக்கெட் விளையாடும்போது எனக்கு எப்பவுமே ஆஃப் சைட் விளையாடவேண்டிய அவஸ்தைதான். இப்படியே சொல்ல ஏராளம்...

இறுதியாக ஒன்றை சொல்ல வேண்டுமன்றால் இடதுகைக்காரர்கள் இரண்டுகைகளையும் ஒன்றுபோல் பாவிக்கும் சமத்துவக்காரர்கள் என்று பதிவு செய்துள்ளார். இவரது இந்த பதிவின் கீழ், அயலான் அப்டேட் ஏதாவது உண்டா ? என்று கேட்டு வருகின்றனர் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்.