தமிழ் திரையுலகில் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் தலைவாசல் விஜய். கடந்த 1992-ம் ஆண்டு செல்வா இயக்கத்தில் வெளியான தலைவாசல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானதால், விஜயாக இருந்தவர் தலைவாசல் விஜய்யாக மாறினார். பல்வேறு படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கேரக்டர்களில் அசத்தியுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார் விஜய்.

இதுவரை 200-கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜய் சில படங்களில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் பணிபுரிந்துள்ளார். சினிமா தவிர்த்து சீரியல்களிலும் தலைகாட்டி வரும் இவர், சன் டிவியில் ஒளிபரப்பான அழகு சீரியலில் ரேவதிக்கு ஜோடியாக பழனிச்சாமி வாத்தியார் என்ற ரோலில் நடித்தார். 

கடந்த ஆண்டு தலைவாசல் விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கிய ஆண்டு என்றே கூறலாம். சூர்யா நடித்த காப்பான், NGK போன்ற படங்களில் நடித்திருந்தார். கடைசியாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான மாஃபியா படத்தில் முகிலன் பாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அக்ஷய் குமாருடன் பெல் பாட்டம் படத்தில் இணைந்துள்ளார். ஏற்கனவே ஜங்க்ளி என்ற இந்திப் படத்தில் நடித்துள்ளார் தலைவாசல் விஜய்க்கு இது இரண்டாவது படமாகும். 

பூஜா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் பெல் பாட்டம் படத்தில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடிகை வாணி கபூர் நடிக்கிறார். மேலும் ஹுமா குரேஷி, லாரா தத்தா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் தலைவாசல் விஜய். இயக்குநர் ரஞ்சித் திவாரி இயக்கத்தில் மறக்கப்பட்ட ஒரு ஹீரோவை பற்றிய த்ரில்லர் கதையாக இந்த படம் உருவாக உள்ளது. இதன் படப்பிடிப்பு லண்டனில் இந்த மாதம் தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகருக்கு படக்குழு நேற்று மும்பையில் இருந்து புறப்பட்டடது. அவர்களுடன் நடிகர் தலைவாசல் விஜயும் கிளாஸ்கோ புறப்பட்டுள்ளார். 

கடந்த 4 மாதங்களாக லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருந்த தலைவாசல் நேற்று படப்பிடிப்புக்காக புறப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய நடிகர் தலைவாசல் விஜய், தன்னை பொறுத்தவரை இது ஒரு தனித்துவமான அனுபவம் என கூறியுள்ளார். தலைவாசல் விஜய் ஒரு ஆடிஷனுக்குப் பிறகு இந்தப் படத்தில் இணைந்ததாக தெரிகிறது. அக்ஷய் குமாரோடு தமிழ் நடிகர் ஒருவர் நடிக்கிறார் என்று பெருமிதம் கொள்கின்றனர் கோலிவுட் ரசிகர்கள்.