தமிழில் கேயார் இயக்கத்தில் வெளியான ஈரமான ரோஜாவே திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் குணசித்திரை நடிகை ஹேமா. இந்த படத்தை தொடர்ந்து விஷால் மற்றும் நயன்தாரா நடித்த சத்யம், பிரஷாந்த் நடித்த சாகசம், பிரபுதேவா மற்றும் தமன்னா நடித்த தேவி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தேவி படத்தில் தமன்னாவின் தயாராக நடித்து அசத்தியிருப்பார். கடந்த ஆண்டு தெலுங்கு பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். 

இவர் தெலுங்கில் இருநூற்று ஐம்பதுக்கும் அதிகமான படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய இவர், பிறகு சில காலம் நடிக்காமல் இருந்தார். வம்சி இயக்கிய முராரி என்ற பட மூலம் மீண்டும் நடிக்க வந்தார். கிருஷ்ணவேணி என்ற பெயரை சினிமாவுக்காக ஹேமா என்று மாற்றி வைத்துள்ளார்.

தெலுங்கு நடிகர்கள் சங்கத் துணைத் தலைவராகவும் இருக்கும் ஹேமா, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நன்கு அறிமுகமானவர். ஜேஎஸ்பி கட்சி சார்பில், கடந்த 2014 ஆம் ஆண்டு ஆந்திராவில் நடந்த பொதுத் தேர்தலிலும் இவர் போட்டியிட்டார். மண்டபேட்டா என்ற தொகுதியில் போட்டியிட்ட இவர், தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சின்ன வயதிலேயே சினிமாவுக்கு வந்துவிட்டதால், அவரால் அதிகமாகப் படிக்க முடிய வில்லை. இது அவர் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. இதையடுத்து திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. படிக்க முடிவு செய்தார். இதற்காக ஐதராபாத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

இதற்கான நுழைவுத் தேர்வு நேற்று நடந்தது. இதில் நடிகை ஹேமா கலந்து கொண்டு தேர்வு எழுதினார். நலகொண்டாவில் உள்ள அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் அவர் இந்த தேர்வை எழுதினார். இந்த வயதிலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் அவர் தேர்வு எழுதியதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். கல்விக்கு வயது ஒரு கட்டுப்பாடு இல்லை என்பதற்கு ஹேமா ஓர் சிறந்த உதாரணம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். நடிகை ஹேமாவை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.