தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் மாநாடு. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில்  இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கும் மாநாடு திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் உடன் இணைந்து நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குநர் S.J.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் பாரதிராஜா, S.A.சந்திரசேகரன், கருணாகரன், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வெகு நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட மாநாடு படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்த தகவலை சமீபத்தில் இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா அறிவித்திருந்தார். வருகிற ஜூன் 21-ஆம் தேதி மாஷா அல்லாஹ் என்ற முதல் பாடல் வெளியாக உள்ள நிலையில் மாநாடு திரைப்படத்தின் அடுத்தடுத்த அதிரடியான ஐந்து  அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது.

மாநாடு திரைப்படம் கட்டாயம் தியேட்டரில் தான் வெளியாகும் OTT யில் வெளியாகாது என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூன் 21ஆம் தேதி மாநாடு திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ள நிலையில் அடுத்ததாக பாடல் வெளியீட்டுக்கு பிறகு படக்குழுவினர் அனைவரும் ட்விட்டர் ஸ்பேஸில் ரசிகர்களுடன் இணைய உள்ளனர். மாநாடு திரைப்படத்தின் டிரைலர் பக்ரீத் தினத்தன்று வெளியாகும் என்றும் படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் அல்லது ஆயுத பூஜை நாட்களில் வெளியாகலாம் என தெரிகிறது. 

இதனிடையே மாநாடு படத்தின் இறுதி படப்பிடிப்பு இந்த வாரத்தோடு முடிவடைகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த அதிரடியான 5 அறிவிப்புகளையும் மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் ட்விட்டர் ஸ்பேஸில்  தெரிவித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாநாடு திரைப்படத்தின் இந்த அறிவிப்புகள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் இன்னும் எதிர்பார்ப்புகளை எகிற வைத்திருக்கிறது.