இந்திய திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்தியாவில் பல்வேறு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சமீபத்தில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான நவரசா வெப்சீரிஸில் நடிகர் சித்தார்த் இன்மை எனும் எபிசோடில் நடித்திருந்தார்.

தொடர்ந்து நடிகர் சித்தார்த்தின் நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தயாராகி இருக்கும் மஹாசமுத்திரம் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் கார்த்திக்.G.கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடித்திருக்கும் டக்கர் திரைப்படமும் தயாராகிவருகிறது.

மேலும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் சித்தார்த் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின.

ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகர் சித்தார்த் சமூக பிரச்சினைகள் குறித்து அவ்வப்போது ட்விட்டரில் பேசுவது வழக்கம். அந்த வகையில் நடிகர் சித்தார்த்தின் மீது வெறுப்பை வெளிப்படுத்தும் விதமாக சிலர் அவர் இறந்துவிட்டதாக பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்னர். இதனால் கோபமடைந்த நடிகர் சித்தார்த் தன்னை குறிவைத்து மிகவும் கீழ் தரமாக வெறுப்புணர்வு கொட்டப்படுகிறது என தெரிவித்துள்ளார்.